ரெயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 45 பவுன் நகைகள் திருட்டு


ரெயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 45 பவுன் நகைகள் திருட்டு
x
தினத்தந்தி 20 April 2018 4:00 AM IST (Updated: 20 April 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கடற்கரை ரெயில் நிலையத்தில் பெண் பயணியிடம் 45 பவுன் நகைகள் திருட்டு போனது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை, 

சென்னை எம்.கே.பி.நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செலின் மேரி (வயது 54). இவர் தனது மகளை பார்ப்பதற்காக பெருங்குடி செல்ல கடற்கரை ரெயில் நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் வந்தார். அங்கு அவர் வேளச்சேரி செல்லும் மின்சார ரெயிலுக்காக காத்திருந்தார்.

வேளச்சேரி செல்லும் மின்சார ரெயில் வந்ததும், செலின்மேரி ரெயில் பெட்டியில் ஏறி அமர்ந்தார். அப்போது தனது பையில் பாதுகாப்பாக வைத்திருந்த 45 பவுன் தங்க நகைகள் திடீரென காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ரெயில் நிலைய வளாகம் முழுவதும் பதற்றத்துடன் நகைகளை தேடினார். ஆனால் அவை கிடைக்கவில்லை.

பின்னர் அவர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் நகைகள் காணாமல் போனது குறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் எழும்பூர் ரெயில்வே இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கலைச்செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முதற்கட்டமாக கடற்கரை ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

*வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்தன்(42) ராமாபுரத்தில் உள்ள தனது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்றதாக, அவரை போலீசார் கைது செய்தனர்.

* வேளச்சேரியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக ஆறுமுகம்(50) சிவசங்கர்(38) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

* காஷ்மீரில் சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் பல்லாவரத்தில் மாவட்ட தலைவர் அல்அமீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

* தியாகராயநகரை சேர்ந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரான பாலசுப்பிரமணியன்(64) என்பவரது வீட்டில் திருட முயன்றதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன்(27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* திருமுல்லைவாயல் பகுதியில் பெட்ரோல் பங்க் காவலாளியான அசாமை சேர்ந்த உசைன்(24) என்பவரிடம் செல்போனை பறித்து சென்றதாக கோகுல்(19) உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

* புளியந்தோப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவா போதை பொருளை விற்றதாக அதேபகுதியை சேர்ந்த அன்புரோஸ்(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மாநகராட்சி ஊழியர் தற்கொலை

* மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மாநகராட்சி ஊழியரான குன்றத்தூரை சேர்ந்த ஆனந்தராஜ்(36) சூளைமேட்டில் உள்ள உறவினர் வீட்டில் பினாயிலை குடித்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்தார்.

* குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த அப்பாசாமி(56) நேற்று கோட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயில் மோதி பலியானார்.

* மெரினா திருவள்ளுவர் சிலை பின்புறம் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை போலீசார் கைப்பற்றி விசாரிக்கிறார்கள்.

* லேகியம் விற்பவர்கள் என கருதி கடந்த மாதம் அயப்பாக்கம் பகுதியில் கொல்கத்தாவை சேர்ந்த குடும்பத்தினரின் காரை எரித்த வழக்கில் 15 பேர் கைதான நிலையில் முக்கிய குற்றவாளியான விஜய் (21) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

* குரோம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வாணியம்பாடியை சேர்ந்த அன்வர்பாஷாவுக்கு நிறுவனம் சம்பள நிலுவைத்தொகை வழங்காத மனவேதனையில் அவர் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* செங்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவனின் மகனும் ஒரு கொலை வழக்கு குற்றவாளியான சந்தோஷ்குமார்(22) தனது நண்பர்களுடன் பாடியநல்லூர் சென்றபோது, அங்கு நமச்சிவாயம்(23) கோஷ்டியை சேர்ந்த 3 பேருடன் தகராறு ஏற்பட்டது. இதில் சந்தோஷ்குமார், கார்த்தி ஆகியோருக்கு வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக இருகோஷ்டியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேரை தேடிவருகிறார்கள்.

* மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த கோபாலன்(78) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கு பீரோவில் இருந்த 32 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

* தி.மு.க. எம்.பி. கனிமொழி குறித்து டுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்யக்கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

* வண்ணாரப்பேட்டையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய, சரவணன் என்பவரது வீட்டில் ஒரு பவுன் தங்கச்சங்கிலி, செல்போன் ஆகியவற்றையும், அருகில் உள்ள கோமதி வீட்டில் ரூ.7 ஆயிரம், செல்போனையும், மார்கண்ட கொண்டாயா வீட்டில் செல்போனையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

* கூட்ட நெரிசலை பயன்படுத்தி மாநகர பஸ்களில் பயணிகளிடம் இருந்து செல்போன்கள் திருடியதாக வியாசர்பாடியை சேர்ந்த பிரான்சிஸ் (26) என்பவரையும், திருட்டு செல்போன்களை வாங்கியதாக பர்மா பஜார் வியாபாரி மருது பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர்.

* பூந்தமல்லியில் என்ஜினீயர் ராம்குமார் (24) என்பவரை கத்தியால் குத்தி செல்போன் பறித்ததாக திருவேற்காட்டை சேர்ந்த ராஜூ (21) கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story