எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்


எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 20 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டத்தில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

பாரதீய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரை இழிவாக கருத்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, அரியலூர் மாவட்டம், தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தா.பழூரில் எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பின்னர் தி.மு.க. கழக அலுவலகத்தில் எச்.ராஜாவின் உருவ பொம்மைக்கு மாலை அணிவித்து பாடை கட்டி ஊர்வலமாக தூக்கி கொண்டு சென்றனர். பின்னர் இடங்கண்ணி பிரிவு சாலையில் உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

மீன்சுருட்டியில்...

இதேபோல் மீன்சுருட்டி அடுத்துள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் எச்.ராஜாவின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். தொடர்ந்து தி.மு.க.வினர் 50 பேர் குறுக்கு ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.

ஜெயங்கொண்டம்

இதேபோல் ஜெயங்கொண்டத்தில் எச்.ராஜா உருவ பொம்மையை தி.மு.க.வினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட கருணாநிதி உள்பட 50 பேர் மீது ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய் துள்ளனர். 

Next Story