மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மனித சங்கிலி போராட்டம்


மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 20 April 2018 4:00 AM IST (Updated: 20 April 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி திருமானூரில் மனித சங்கிலி போராட்டம்

திருமானூர்,

திருமானூர் ஒன்றிய பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால், கொள்ளிடம் ஆற்றில் இயங்கும் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பயன் பெறும் பொதுமக்களும், ஆழ்குழாய் கிணறு வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளும் பாதிக்கப்படுவர். ஆற்றில் மணல் குறைந்து போனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போவதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டு விடும். எனவே, திருமானூர் மற்றும் அதன் ஒன்றிய பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி திருமானூரில் கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்புக்குழு, அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய சங்க அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், சமூக தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. திருமானூர் கொள்ளிடம் ஆற்று பாலத்தில் தொடங்கி கடைவீதி வழியாக சுமார் 1½ கி.மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. இதைதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தனபால், இந்திய விவசாய சங்கம் ராஜேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் நடராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் வடிவேல்முருகன், பா.ம.க. மாவட்ட தலைவர் ரவிசங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் தங்க ஜெயபாலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன், காங்கிரஸ் கட்சி மகளிரணி மாரியம்மாள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story