சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் சாதி, மத ரீதியாக அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரம்,
பொது அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவும் சிலர் தேசிய தலைவர்கள், மாநில தலைவர்களுக்கு எதிராகவும், சாதி, மத ரீதியாகவும் அவர் களை அவதூறாக பேசி முகநூல், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் பரவ விடுவது சட்டப்படி குற்றமாகும். பொதுமக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளையும், எதிர்ப்புகளையும் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்த வேண்டுமே தவிர இது போன்று சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் வன்முறையை தூண்டும் விதத்திலும், தேசிய, மாநில கட்சி தலைவர்களை பற்றி தரக்குறைவாக வீடியோ பதிவிடுவது மற்றும் மனதை புண்படுத்தும் வாசகங்களை சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது.
சென்னையை சேர்ந்த ஒரு பெண் தனது வாட்ஸ்-அப்பில் முக்கிய தலைவருக்கு எதிராக பேசியுள்ளார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலர் சாதி ரீதியாக தங்களது எதிர்ப்பை செல்போனில் தெரிவித்து அதையே வீடியோவாக சமூக வலைதளமான வாட்ஸ்-அப்பில் பரப்பி வந்துள்ளனர். சில தனிப்பட்ட நபர்கள் மீது பொய்யான புகார்களையும், அவதூறுகளையும் சமூக வலைதளங்களில் பரவ விடுகின்றனர்.
இதுபோன்ற செயல்களில், படித்துக்கொண்டிருக்கும் இளஞ்சிறார்களே அதிகம் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. பொதுமக்கள், மாணவர்கள் சமூக வலைதளங்களை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவும், பதிவிடவும் காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சமூக வலை தளங்களை பயன்படுத்துவது சமூகத்தின் நல்லிணக்கத்திற்காக இருக்க வேண்டுமே தவிர பொது அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக இருக்கக்கூடாது. ஆகவே சமூக வலைதளங்களில் சாதி, மத ரீதியாக அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story