தண்ணீர் குறைந்ததால் கரியாலூர் குழாமில் படகு சவாரி நிறுத்தம்
கரியாலூர் படகு குழாமில் தண்ணீர் குறைந்ததால் படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
கச்சிராயபாளையம்,
இயற்கை எழில்கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. ஏழைகளின் சுற்றுலா தலமான இங்கு பெரியார், மேகம், கவியம் உள்ளிட்ட 9 நீர்வீழ்ச்சிகள், கரியாலூர் படகு குழாம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பருவ மழைகாலத்தில் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
இதனை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் கடலூர், சேலம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் குடும்பத்துடன் கல்வராயன்மலைக்கு சுற்றுலா வந்து, நீர்வீழ்ச்சிகளில் குளித்தும், கரியாலூரில் உள்ள படகு குழாமில் ஆனந்தமாக படகு சவாரி செய்தும், சிறுவர் பூங்காக்களில் விளையாடி செல்வார்கள்.
கவியம் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட சில நீர்வீழ்ச்சிகளில் இருந்து வரும் தண்ணீர் கரியாலூரில் உள்ள படகு குழாமில் சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் அந்த படகு குழாமில் எப்போது தண்ணீர் இருக்கும். சுற்றலா பயணிகளும் படகு சவாரி செய்து மகிழ்வார்கள்.
கடந்த ஆண்டு பருவமழைகாலத்தில் மழை பெய்ததால் படகு குழாம் நிரம்பி வழிந்தது. ஆனால் அதன்பிறகு மழை பெய்ய வில்லை. கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சிகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் படகு குழாமில் தண்ணீர் வேகமாக குறைந்தது. இதனால் தற்போது படகு குழாமில் படகு சென்றால், தரை தட்டுகிறது. அந்த அளவுக்கு தண்ணீர் குறைந்துள்ளதால் படகு சவாரி திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே படகுகள் அனைத்தும் படகு குழாமின் கரையோரத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால் கல்வராயன்மலைக்கு சுற்றலா வரும் பயணிகள், நீர்வீழ்ச்சிகள் வறண்டு கிடப்பதால் அதில் குளிக்க முடியாமல் செல்கின்றனர். சரி குளிக்கத்தான் முடியவில்லை. ஆனந்தமாக படகு சவாரி செய்யலாம் என்று நினைத்து கரியாலூருக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணமுடிகிறது.
கோடைகாலம் தொடங்கி உள்ளதால் கல்வராயன்மலைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். எனவே அவர்கள் உற்சாகமாக படகு சவாரி செய்யும் வகையில், அருகில் உள்ள குளங்களில் இருந்தும், மோட்டார் மூலமும் கரியாலூர் படகு குழாமில் தண்ணீரை நிரப்பி படகு சவாரி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story