மின்சாரம் தாக்கி பலியான விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்


மின்சாரம் தாக்கி பலியான விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 20 April 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி பலியான விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சி அணவயல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். விவசாயி. இவர் கடந்த மாதம் 22-ந்தேதி தனது தோட்டத்தில் பலாப்பழம் பறிக்க ஏணி வைத்து மரத்தில் ஏறிய போது அந்த வழியாக தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மரத்தில் உரசியதால் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வடகாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காத்திருப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழ்செல்வன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி தமிழ்செல்வன் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புளிச்சங்காடு கைக்காட்டியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அடுத்த கட்ட போராட்டம்

இதற்கு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகரன், புஸ்பராஜ், முன்னாள் எம்.பி.ராஜாபரமசிவம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திருஞானம், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலம், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாயி தமிழ்செல்வன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். 

Next Story