மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த ஐ.டி.ஐ. மாணவன் கைது


மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த ஐ.டி.ஐ. மாணவன் கைது
x
தினத்தந்தி 20 April 2018 3:04 AM IST (Updated: 20 April 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த ஐ.டி.ஐ. மாணவன் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை,

ஆற்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். இவருக்கும் ஆற்காடு தாலுகா சொரையூர் அருகே உள்ள தோணிமேடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த தங்கராசு (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்கராசு செய்யாறில் ஐ.டி.ஐ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இருவரிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தங்கராசு மாணவியிடம், திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்து தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். தற்போது அந்த மாணவி தங்கராசுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு தங்கராசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story