பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.6.45 கோடி போதைப்பொருள் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.6.45 கோடி போதைப்பொருள் சிக்கியது
x
தினத்தந்தி 20 April 2018 4:17 AM IST (Updated: 20 April 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.6.45 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது. இந்த போதைப்பொருள் சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு முனையத்தில் இருந்து ஒரு பார்சலில் போதைப்பொருள் மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சரக்கு முனையத்தில் உள்ள பார்சல்களில் அதிகாரிகள் தீவிர சோதனையிட்டனர்.

அப்போது, பனைவெல்லம் இருந்த பாக்கெட்டுகளின் உள்ளே காற்று புகாத வகையில் பாலித்தீன் கவரில் மீத்தாஹூயுலோன் என்னும் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து 12 கிலோ 900 கிராம் எடைகொண்ட போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.45 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு சென்னையில் செயல்படும் தனியார் கூரியர் நிறுவனத்தில் இருந்து பனைவெல்லம் அடங்கிய பாக்கெட்டுகளில் போதைப்பொருள் பதுக்கி வைத்து பெங்களூருவுக்கு வந்ததும், பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் கோலாலம்பூருக்கு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.

ஏற்கனவே, பெங்களூரு விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் ரூ.1 கோடி மதிப்பிலான கீட்டாமைன் எனும் போதைப்பொருள் சிக்கியது. இந்த போதைப்பொருள், சென்னையை சேர்ந்த தனியார் கூரியர் நிறுவனம் மூலம் கோலாலம்பூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அதே கூரியர் நிறுவனம் மூலம் தான் தற்போதும் போதைப்பொருள் கோலாலம்பூருக்கு அனுப்பிவைக்க முயற்சி நடந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

Next Story