அத்துமீறலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து செல்ல வேண்டும்


அத்துமீறலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 20 April 2018 5:30 AM IST (Updated: 20 April 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் அத்துமீறலை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணி செல்லவேண்டும் என சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா கூறினார்.

காலாப்பட்டு, 

புதுவை காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். சமீப காலமாக மாணவிகளிடம் மர்மநபர்கள் அத்துமீறல்கள் மற்றும் விடுதி அறைக்குள் புகுந்து பொருட்கள் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதை தொடர்ந்து புதுவை சட்டம் ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா பல்கலைக்கழகத்துக்கு வந்தார். வளாகம் முழுவதையும் பார்வையிட்ட அவர் அங்கு பல இடங்களில் சுற்றுச்சுவர்கள் உடைக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை கண்டார். உடனே அவர் சுற்றுச்சுவரை செப்பனிடும்படி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். மேலும் மாலை, இரவு நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் காலாப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

அடையாள அட்டையின்றி வரும் யாரையும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என அங்கிருந்த காவலாளிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ-மாணவிகளுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா ஆலோசனை நடத்தினார். அப்போது வெளியே செல்லும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மீண்டும் உள்ளே வந்துவிட வேண்டும் என கூறினார். தனியாக வெளியே செல்லும் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக மித்ரா திட்டத்தின் கீழ் அந்த நம்பரை செல்போனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால் அந்த எண்ணில் தொடர்பு கொண்டால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்த தகவல் வரும். அதனை வைத்து போலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கூறினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங், பல்கலைக்கழக சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் காலாப்பட்டு போலீசார் உடன் இருந்தனர்.

Next Story