போக்குவரத்துக்கழக அதிகாரி–ஊழியர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் மாணவர்கள்–பயணிகள் தவிப்பு


போக்குவரத்துக்கழக அதிகாரி–ஊழியர்கள் மீது தாக்குதல்: நெல்லையில் அரசு பஸ்கள் திடீர் நிறுத்தம் மாணவர்கள்–பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 21 April 2018 3:00 AM IST (Updated: 20 April 2018 6:43 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போக்குவரத்துக்கழக அதிகாரி மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் மாணவர்கள், பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

நெல்லை, 

நெல்லையில் போக்குவரத்துக்கழக அதிகாரி மற்றும் ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் மாணவர்கள், பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

நிலப்பிரச்சினை 

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலம் ஒருவரிடம் இருந்து நில உச்சவரம்பு சட்டத்தின்படி அரசால் கையகப்படுத்தப்பட்டு 1984–ம் ஆண்டு கட்டபொம்மன் போக்குவரத்து கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை ஆணை பிறப்பித்து உள்ளது.

இந்த நிலையில் அந்த நிலத்தின் உரிமையாளர் நில உச்சவரம்பு சட்டப்படி தங்களுக்கு அரசு வழங்கிய தொகை போதவில்லை என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாகவும், அதில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

வாக்குவாதம் 

இந்த நிலையில் அந்த நிலத்தை வாங்கியதாக கூறப்படும் சிலர் அந்த நிலத்துக்குள் அரசு பஸ்கள் செல்லமுடியாத அளவிற்கு நேற்று முன்தினம் இரவில் பொக்லைன் எந்திரங்களை வரிசையாக நிறுத்தி இருந்தனர். நேற்று காலையில் அந்த நிலத்தில் அரசு பஸ்களையும், பணிமனை வாகனங்களையும் நிறுத்துவதற்கு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், டிரைவர்கள் வந்தனர்.

அப்போது அந்த வாகனங்களை உள்ளே கொண்டு செல்லக்கூடாது என்று கூறி அந்த நிலத்தை உரிமை கொண்டாடுகின்றவர்கள் கூறினார்கள். இதனால் அவர்களுக்கும், அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் சிலர் அந்த இடத்தின் அருகில் உள்ள ஒரு புதர்பகுதியை சரிசெய்து அதன் வழியாக வாகனங்களை உள்ளே கொண்டு செல்ல முயன்றனர்.

8 பேர் காயம் 

அந்த நிலத்திற்குள் எந்த வாகனத்தையும் கொண்டு செல்லக்கூடாது என்று கூறி நிலத்தை உரிமை கொண்டாடக்கூடியவர்கள் தடுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோதலில் அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் மாரியப்பன் (வயது 51), டிரைவர்கள் பெருமாள் (46), டேவிட் ஆசிர்வாதம் (55), கென்னடி (42), கண்டக்டர் மனோகர் (55) ஆகியோர் காயம் அடைந்தனர். இதேபோல் நிலத்தை உரிமை கொண்டாடுகிறவர்கள் தரப்பில் மகாராஜநகரை சேர்ந்த இளஞ்செழியன் (45), அம்பை மாரிக்கண்ணன் (27), கே.டி.சி.நகர் ராஜ்குமார் ஆகியோரும் காயம் அடைந்தனர். இவர்கள் 8 பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பஸ்கள் திடீர் நிறுத்தம் 

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலத்திற்கு உரிமை கொண்டாடுகிறவர்கள் தரப்பை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியதால் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமி‌ஷனர் நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ராமையா, பத்மாவதி ஆகியோர் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்கள் தாங்கள் ஓட்டிவந்த பஸ்களை நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ்நிலையங்களில் நிறுத்திவிட்டு திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். காலை 8.45 மணியில் இருந்து நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு செல்கின்ற பஸ்கள் இயக்கப்படவில்லை. புதிய பஸ்நிலையத்தில் இருந்து சந்திப்பு பஸ்நிலையத்திற்கும், சந்திப்பு பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்திற்கும் டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

பயணிகள் முற்றுகை 

இதையடுத்து பயணிகள் பஸ்நிலையங்களில் இருந்த போக்குவரத்து கழக அதிகாரிகளை முற்றுகையிட்டு பஸ்களை இயக்க வலியுறுத்தினர். ஆனால் டிரைவர்கள்–கண்டக்டர்கள், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, எனவே பஸ்களை இயக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர்.

இதனால் கல்லூரி மாணவ–மாணவிகள், பணிக்கு செல்கின்றவர்கள், பொதுமக்கள் தவிப்படைந்தனர். அவர்கள் தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோக்களில் ஏறி சென்றனர்.

பேச்சுவார்த்தை 

இந்த நிலையில் மகாராஜநகரில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்களிடம் நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டம் காரணமாக, காலை 8.45 மணியில் இருந்து 10.45 மணி வரை 2 மணி நேரம் பஸ்கள் இயக்கப்படவில்லை. அதன்பிறகு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. இந்த சம்பவம் குறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story