நெல் கொள்முதல் நிலையத்துக்குள் பெண் அதிகாரி உள்பட 3 பேரை வைத்து பூட்டியதால் பரபரப்பு


நெல் கொள்முதல் நிலையத்துக்குள் பெண் அதிகாரி உள்பட 3 பேரை வைத்து பூட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 April 2018 4:30 AM IST (Updated: 21 April 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

பெருங்கடம்பனூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்துக்குள் பெண் அதிகாரி உள்பட 3 பேரை வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

பெருங்கடம்பனூரில் உள்ள நுகர்பொருள்வாணிப கழக கொள்முதல் நிலையத்துக்குள் பெண் அதிகாரி உள்பட 3 பேரை வைத்து விவசாயிகள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் பெருங்கடம்பனூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படுவதாக தகவல் பரவியது. இதையடுத்து கடந்த 9-ந்தேதி பெருங்கடம்பனூரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கொள்முதல் நிலையத்தை மாற்ற கூடாது என்று நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து கொள்முதல் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல்மூட்டைகளை வேறு கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்வதற்காக வாணிப கழக பணியாளர்கள் லாரியில் வந்தனர். இதையடுத்து அங்குள்ள நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெருங்கடம்பனூர் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பெருங்கடம்பனூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள் பெண் உள்பட 3 அதிகாரிகளை கொள்முதல் நிலையத்தின் உள்ளே வைத்து வளாகத்தின் கதவுகளை பூட்டுப்போட்டு பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கொள்முதல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்த நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளை கண்டித்து நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழ்வேளூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story