அதிகாரிகள் ஒத்துழைப்போடு மணல் கடத்தல் நடக்கிறது குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்


அதிகாரிகள் ஒத்துழைப்போடு மணல் கடத்தல் நடக்கிறது குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 21 April 2018 3:39 AM IST (Updated: 21 April 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

அதிகாரிகள் ஒத்துழைப்போடுதான் மணல் கடத்தல் நடக்கிறது என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

பொன்னையாற்றில் சீக்கராஜபுரம் பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இது குறித்து பல வருடங்களாக புகார் தெரிவித்து வருகிறோம். இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் எங்கள்மீது கோபம் அடைகிறார்கள். கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீக்கராஜபுரம் ஏரியில் தண்ணீர் உள்ளது. ஆனால் கால்வாய் தூர்வாரப்படாததால் ஏரியில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாதநிலை உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

காட்டு பன்றிகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுகிறது. பன்றிகளை சுடவேண்டும். அதிகாரிகளால் சுடமுடியவில்லை என்றால் அதற்கான அதிகாரத்தை எங்களுக்கு கொடுங்கள், நாங்களே காட்டு பன்றிகளை சுட்டுக்கொன்று உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்றனர்.

குடியாத்தத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.20 கமிஷன் பிடித்தம் செய்கிறார்கள். மேல் அரசம்பட்டில் இருந்து ஒடுகத்தூர் வரையில் ஆற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நடக்கும் குறைதீர்வு கூட்டத்திற்கு அதிகாரிகள் வருவதில்லை. அடுத்த கூட்டத்திற்கும் அதிகாரிகள் வரவில்லை என்றால் அலுவலகத்தை பூட்டி மறியல் போராட்டம் நடத்துவோம்.

மாதனூர் வனப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிவிட்டு தினமும் 1000 மாட்டு வண்டிகளில் மணல் கடத்துகிறார்கள். மணல் கடத்தல் குறித்து வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் மணல் கடத்தல்காரர்களுக்கு தகவல் தெரிவித்து விடுகிறார்கள். எனவே வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடுதான் மணல் கடத்தல் நடக்கிறது.

கழிவுநீர் கலப்பதால் பாலாறு நாசமாகிவிட்டது. கலெக்டர் ஒரு குழு அமைத்து பாலாற்றை தூய்மைப்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 3 வருடங்களாக பணம்வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவாறு விவசாயிகள் பேசினர்.

விவசாயிகளின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், கூட்டத்தில் விவசாயிகள் கூறும் கருத்துகளை, அதிகாரிகள் குறித்து வைத்துக்கொண்டு அடுத்த கூட்டத்திற்கு வரும்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். கடமைக்காக வந்தோம், சென்றோம் என்று இருக்கக்கூடாது என்றார்.


Next Story