வருவாய்த்துறையை கண்டித்து மலையில் குடியேறி போராட்டம் நடத்திய 150 பேர் கைது
வருவாய்த்துறையை கண்டித்து விடிய, விடிய மலையில் குடியேறி போராட்டம் நடத்திய 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூர்,
சின்னமனூர் அருகே சின்னஓவுலாபுரம் உள்ளது. இங்கு ஆதிதிராவிடர் காலனிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் மற்றும் தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் உத்தமபாளையம் தாசில்தார் பாலசண்முகம், துணை தாசில்தார்கள் நசீர், சுருளி மற்றும் வருவாய்த்துறையினர், போலீஸ் பாதுகாப்புடன் நிலம் குறித்த அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் குறிப்பிட்ட இடம் தனியார் பட்டா இடமாக உள்ளது என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதற்கு அந்தபகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து எங்களுக்கு சொந்தமான இடத்தை சிலர் போலியான ஆவணங்கள் மூலம் பட்டா பெற்றுள்ளனர். எனவே பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் தனியார் இடம் என்று அதிகாரிகள் திரும்பி சென்றதாக தெரிகிறது.வருவாய்த்துறையினரின் இந்த நடவடிக்கையை கண்டித்து, கிராமத்தை விட்டு வெளியேறி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருகில் உள்ள வெள்ளைக்கரடு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் குடியேறி உணவு சமைத்து சாப்பிட்டு மலைபகுதியிலேயே போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. சென்னியப்பன், தாசில்தார் பாலசண்முகம், ராயப்பன்பட்டி இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் வெள்ளைக்கரடு மலைப்பகுதிக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திரும்பி சென்றனர்.இதனையடுத்து நேற்று 2-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதையடுத்து அங்கு சென்ற உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு தங்கி போராட்டம் நடத்தி வந்த 150 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சின்னமனூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் மீண்டும் அதே பகுதியில் நில அளவீடு செய்தனர். ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் அளவீடு பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து இன்று (சனிக் கிழமை) அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள் கிராமத்தில் வீதியில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story