கர்நாடக மக்கள் மதவாத கட்சியான பா.ஜனதாவை புறக்கணிக்க வேண்டும்


கர்நாடக மக்கள் மதவாத கட்சியான பா.ஜனதாவை புறக்கணிக்க வேண்டும்
x
தினத்தந்தி 21 April 2018 5:01 AM IST (Updated: 21 April 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மக்கள் மதவாத கட்சியான பா.ஜனதாவை புறக்கணிக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.

பெங்களூரு,

நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் எந்த கட்சியிலும் சேரவில்லை. எந்த கட்சியிலும் உறுப்பினராகவும் இல்லை. நான் இந்த நாட்டின் ஒரு சாமானிய குடிமகன். நாட்டின் நலனுக்காக கேள்விகளை கேட்க தொடங்கியுள்ளேன். எனக்கு பிறகு ஏராளமானவர்கள் என்னை போல் கேள்வி கேட்க தொடங்கி இருக்கிறார்கள். நான் கம்யூனிஸ்டு கொள்கையை மதிக்கிறேன்.

பா.ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்சியினர் வளர்ச்சி பற்றியே பேசவில்லை. சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறார்கள். எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள்.

அதனால் பா.ஜனதா, நாட்டுக்கு அபாயகரமான கட்சி ஆகும். அதை ஒரு அந்நிய கட்சியாகவே நான் கருதுகிறேன். அங்கு இருந்து வரும் தலைவர்களிடம் இங்குள்ள உள்ளூர் தலைவர்கள் யாரும் பேசுவதை பார்க்க முடியவில்லை. அந்த தலைவர்கள் பேசுவதை இவர்கள் வேடிக்கை பார்ப்பதை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

‘ஜஸ்ட்ஆஸ்கிங்‘ என்ற ஒரு அமைப்பை நான் ஏற்படுத்தியுள்ளேன். இது அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பு. நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாவட்ட குழுக்களை அமைத்து வருகிறேன். இந்த அமைப்பை பலப்படுத்தும் பணியில் நான் ஈடுபட்டுள்ளேன். அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அரசின் தவறுகளை தட்டி கேட்க வேண்டும். இது குறைந்து கொண்டு வருகிறது. இந்த நிலை மாற வேண்டும். அனைவருக்கும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அரசின் செயல்பாடுகளை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டியது அவசியம்.

காவிரி விவகாரம் ஒரே நாளில் தீர்க்கக்கூடிய பிரச்சினை இல்லை. அதற்கு பல்வேறு வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் மொழி நல்லிணக்கத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு நாடகமாடுகிறது. நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இந்த பிரச்சினையை அப்படியே வைத்துக்கொண்டு கட்சிகள் அரசியல் நடத்துகின்றன.

தேவேகவுடாவை தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் சந்தித்து பேசினார். பா.ஜனதாவுடன் மதசார்பற்ற கட்சியான ஜனதா தளம்(எஸ்) கைகோர்க்கும் என்ற தகவல் இருந்தது. இதை தெளிவுபடுத்தி கொள்ளவே நான் தேவேகவுடாவை சந்தித்து பேசினேன். தேவேகவுடாவுடன் பேசிய பிறகு அது தொடர்பான தகவல்கள் தவறானவை என்பதை அறிந்து கொண்டேன். சந்திரசேகரராவ் நற்பணிகளை ஆற்றி வருகிறார். நாட்டின் நலன் சார்ந்த விஷயத்தில் அவருடைய கருத்துடன் எனது கருத்து ஒத்துப்போகிறது.

சட்டசபை தேர்தலில் மதவாத கட்சியான பா.ஜனதாவை புறக்கணிக்க வேண்டும். இது தான் கர்நாடக மக்களுக்கு எனது வேண்டுகோள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கட்சிகளை தொடங்கியுள்ளனர். அவர்களின் கொள்கைகள் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. அவர்களின் முழக்கம் என்ன என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சினிமாக்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துவிட்டதால் நான் அரசியல் பக்கம் வந்துள்ளதாக கூறுவது தவறு. தற்போது 12 படங்களில் நடித்து வருகிறேன். அதற்கும், அரசியலுக்கும் தொடர்பு இல்லை. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது நோக்கம். எனக்கு தேவையான அளவுக்கு சொத்து, புகழ் எல்லாம் உள்ளது. மதவாதத்தை திணிப்பதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நான் மதங்களுக்கு எதிரானவன் கிடையாது. ஒரு மதத்தை திணிப்பதை தான் எதிர்க்கிறேன்.

நான் மக்களை பற்றி கவலைப்படுகிறேன். காஷ்மீரில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். இது ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே, குறிப்பாக ஆண் சமூகத்திற்கு பெரும் தலைகுனிவு ஆகும். இதில் மதத்திற்கு இடம் இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக ஒரு கட்சியினர் குரல் கொடுக்கிறார்கள். அவர்களை ஆதரிக்கிறார்கள்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். 

Next Story