தாதா அருண் காவ்லி கூட்டாளி கொலையில் பாருக் டக்ளா கைது


தாதா அருண் காவ்லி கூட்டாளி கொலையில் பாருக் டக்ளா கைது
x
தினத்தந்தி 21 April 2018 5:18 AM IST (Updated: 21 April 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

26 ஆண்டுகளுக்கு பிறகு தாதா அருண் காவ்லி கூட்டாளி கொலை வழக்கில் பாருக் டக்ளா கைது செய்யப்பட்டார்.

மும்பை,

26 ஆண்டுகளுக்கு பிறகு தாதா அருண் காவ்லி கூட்டாளி கொலை வழக்கில் பாருக் டக்ளா கைது செய்யப்பட்டார்.

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் உறவினர் இஸ்மாயில் பார்கர். இவரை கடந்த 1992-ம் ஆண்டு தாதா அருண் காவ்லியின் கூட்டாளிகள் கொலை செய்தனர். இதற்கு பழி தீர்க்கும் வகையில், அதே ஆண்டு மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் காவ்லியின் கூட்டாளியான சைலேஷ் ஹால்டங்கர் என்பவரை தாதா இப்ராகிமின் கூட்டாளிகள் 24 பேர் சேர்ந்து சரமாரியாக சுட்டுக்கொலை செய்தனர். இதில், மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசாரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு முன்னும், பின்னும் தாவூத் இப்ராகிம் கும்பலை சேர்ந்த 24 பேரும் தங்குவதற்கு தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான பாருக் டக்ளா ஏற்பாடு செய்து கொடுத்து இருந்ததும், சம்பவத்துக்கு உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர். மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பாருக் டக்ளா, கடந்த மாதம் துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, நேற்றுமுன்தினம் மும்பை குற்றப்பிரிவு போலீசார் மேற்படி தாதா அருண் காவ்லியின் கூட்டாளி சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு பாருக் டக்ளாவை தற்போது கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 27-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

Next Story