விஞ்ஞானிகளை உருவாக்கும் விஞ்ஞானி!
ஒரு துறையில் உயர்ந்தவர்கள், அதே துறை சார்ந்த பிறர் உயர வழிகாட்டுவதும், கைதூக்கிவிடுவதும் அபூர்வம். மாஷா நஸீம் அந்த அபூர்வ ரகத்தைச் சேர்ந்தவர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடையைச் சேர்ந்த மாஷா, பிறவி விஞ்ஞானி என்று கூறத்தக்க வகையில் எண்ணற்ற கண்டு பிடிப்புகளை உருவாக்கிக் குவித்தவர்.
அந்தக் கண்டுபிடிப்புகளில் ‘ஹைடெக் டிரெய்ன் டாய்லெட்’ என்ற நவீன கழிப்பறை, இந்திய ரெயில்வேயாலும், ‘நெருப்பில்லா அரக்கு முத்திரை வைப்பான்’ இந்திய தேர்தல் ஆணையத்தாலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் பாராட்டுப் பெற்றவர் மாஷா.
சர்வதேச, தேசிய அளவிலான மாஷாவின் விருதுப் பட்டியலில், சிறந்த இளையோருக்கான தேசிய விருதும், மாநில விருதும் அடக்கம்.
இதற்கெல்லாம் மேலாக, தன்னைப் போல மேலும் பல விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும், இந்தியாவின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்கும் இளஞ்சூரியன்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ‘மாஷா இன்னொவேஷன் சென்டர்’ என்ற அறிவியல் ஆக்கத்திறன் மையத்தை நடத்திவருகிறார்.
அந்த மையத்தைத் தொடங்கியதன் நோக்கம் மற்றும் பிற விஷயங்கள் குறித்து மாஷாவுடன் பேசுவோம்...
நீங்கள் அறிவியல் ஆக்கத்திறன் மையத்தைத் தொடங்கியதன் நோக்கம் என்ன?
அறிவியல் சிந்தனையுள்ள மாணவ, மாணவியர், குறிப்பாகக் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கும், அதற்கு உரிய அங்கீகாரம் பெறுவதற்கும் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஒரு மாணவ விஞ்ஞானியாக அனுபவப்பூர்வமாக உணர்ந்தவள் நான். எனவேதான் இளம் அறிவியல் சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இம்மையத்தைத் தொடங்கினேன்.
மையத்துக்குத் தேவையான நிதி?
லாப நோக்கமற்ற சேவை அமைப்பான எங்கள் மையத்தை, எனது பாட்டி கொடுத்த ரூ. 1 லட்சம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ரூ. 25 ஆயிரம் நிதியுதவியுடன் தொடங்கினேன். கடந்த 2014-ம் ஆண்டு, அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் இம்மையத்தை திறந்துவைத்தார். அமெரிக்கா வில் கூகுள் தலைமையகத்தில் நான் பெற்ற பயிற்சி, இம்மையத்தை நடத்த உதவுகிறது.
இந்த மையத்தின் மூலம் என்னென்ன பணிகளை மேற்கொள்கிறீர்கள்?
மாணவர்களின் அறிவியல் யோசனைகளுக்கு நிஜ வடிவம் கொடுக்க எங்கள் மையம் உதவுகிறது. கருத்தரங்குகள், கண்காட்சிகள் மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை வளர்த்து, அவர்களை தேசிய விருது பெறும் அளவுக்கு உயர்த்துகிறோம். அப்படி இம்மையத்தின் மூலம் இதுவரை 7 மாணவர்கள் தேசிய விருது பெற்றிருப்பதும் மற்றும் பலர் தென்னிந்திய, மாநில, மாவட்ட விருதுகள் பெற்றிருப்பதும் எங்களுக்குப் பெருமையும் நிறைவும் தரும் விஷயம்.
நீங்கள் இதுவரை எத்தனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறீர்கள்?
பள்ளி நாட்கள் தொடங்கி இதுவரை நான் 14 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறேன். அவற்றின் 10-க்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறேன்.
எதை மனதில் வைத்து கண்டுபிடிப்புகளை உருவாக்குவீர்கள்?
சாதாரண மக்களுக்கும் பயன்படக்கூடியதாக இருக்கவேண்டும், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே எனது கண்டுபிடிப்புகள் அமைந்திருக்கும். அவற்றைத் தயாரிப்பதற்கு அதிகச் செலவும் பிடிக்காது.
புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதுடன், பிறருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவதிலும் நீங்கள் ஆர்வமாயிருக்கிறீர்களே?
ஆமாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் கி.மீ.க்கு மேல் பயணம் செய்து ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., உள்பட 110-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் உரை நிகழ்த்தியிருக்கிறேன். வெளிநாடுகளில், அமெரிக்கா சிலிக்கான் வேலி, சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம், அறிவியல் மையம், நான்யாங் பல்கலைக்கழகம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் நான் பேசியிருக்கிறேன்.
பிறருக்கு வழிகாட்டும் ஊக்கம் உங்களுக்குள் பிறந்தது எப்படி?
நான் நமது முன்னாள் ஜனாதிபதியும் இளைஞர்களின் ஆதர்ச நாயகருமான அப்துல் கலாமை 6 முறை சந்தித்திருக்கிறேன். இந்தியாவுக்காக, இந்திய இளைய சமுதாயத்துக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர், கலாம். அவருடன் பழகியதாலோ என்னவோ, எனக்குள்ளும் பிறருக்கு உதவும் எண்ணம் வித்தாக விழுந்து ஆழ வேர் விட்டிருக்கிறது.
கலாம் உடனான சந்திப்புகளின்போது உங்கள் மனதில் பதிந்தது எது?
கலாம் அய்யாவை மாநாடு போன்ற நிகழ்வுகளின்போது 3 தடவையும், தனிப்பட்ட முறையில் 3 தடவையும் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பும் உற்சாக டானிக் பருகியதுபோல உத்வேகம் தரும். 2009-ம் ஆண்டு எனது அறிவியல் கண்டுபிடிப்புக்காக தேசிய விருது பெற்றபோது பாராட்டிய அவர், அடுத்த ஆண்டும் நீ தேசிய விருது பெறுவாய் என்று வாழ்த்தினார். அதே மாதிரி நடந்தது!
நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி?
நான் 3 சர்வதேச விருதுகள், 2 ஜனாதிபதி விருதுகள், 5 தேசிய விருதுகள், 5 தென்னிந்திய விருதுகள் மற்றும் ஒரு மாநில விருதைப் பெற்றிருக்கிறேன்.
அந்த விருதுகளில் பெருமையாகக் கருதுவது எதை?
கடந்த 2016-ம் ஆண்டு, எனது சமூகத் தொண்டுகளுக்காக சிறந்த இளையோருக்கான மாநில விருதை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கையால் பெற்றதையும், இந்த ஆண்டு சிறந்த இளையோருக்கான தேசிய விருதைப் பெற்றதையும் பெருமையாகக் கருது கிறேன். நொய்டாவில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விருதை வழங்கினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் எங்களை வாழ்த்தினார்.
உலகின் பல நாடுகளுக்கும் பறந்து மாணவர்கள் மத்தியில் பேசுகிறீர்கள், பயிற்சியளிக்கிறீர்கள். நம் நாட்டு மாணவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் என்ன வித்தியாசத்தை நீங்கள் காண்கிறீர்கள்?
வெளிநாட்டு மாணவர்களுக்கு நல்ல வசதி இருக்கிறது. ஏற்கனவே உள்ள நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேயே அவர்களின் சிந்தனைப் போக்கு உள்ளது. ஆனால் எளிய பொருட்களில் இருந்தும் புதுமைகளைப் படைக்கும் அரிய திறன் நமது மாணவர்களிடம்தான் இருக்கிறது. அதை சரியான விதத்தில் வெளிக்கொணர்ந்தால் போதும், நம் நாட்டின் நிலை உலக அரங்கில் வெகுவாக உயர்ந்துவிடும்.
ஆக்கத்திறன் மையத்தை நடத்திய நான்காண்டு கால அனுபவத்தில் உங்களுக்குத் தோன்றுவது என்ன?
நமது மாணவ, மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்துக்கும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்ற துடிப்புக்கும் குறைவே இல்லை. எந்த வழியில் செல்வது என்பதுதான் தெரியவில்லை. எனவே அவர்களின் பாதையில் வெளிச்சம் பாய்ச்சுவதில் எனக்கு மகிழ்ச்சி!
லாப நோக்கமற்ற இந்த மையத்தை நடத்துவதற்கான நிதி ஆதாரம்?
நல்ல மனம் கொண்டவர்களுக்கு இன்னும் இந்த உலகில் பஞ்சமில்லை. என்னுடைய நோக்கம் புரிந்து அவர்கள் உதவி செய்கிறார்கள். அரசாங்கமும் கைகொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
உங்களின் எதிர்கால இலக்குகள் என்ன?
மேலும் அதிகமான மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுகளில் வழிகாட்டும் வகையில் எங்கள் அறிவியல் மையத்தை ஒரு தேசிய மையமாக மேம்படுத்த வேண்டும்.
‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என நடைபோடும் மாஷா மேலும் மேலும் வெல்லட்டும்!
Related Tags :
Next Story