தீவிரவாதத்தை பந்தாடும் கால்பந்து அணி


தீவிரவாதத்தை பந்தாடும் கால்பந்து அணி
x
தினத்தந்தி 21 April 2018 1:50 PM IST (Updated: 21 April 2018 1:50 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் மாநில அரசு ஒரு புதுமையான முயற்சியில் இறங்கியிருக்கிறது.

காஷ்மீர் பகுதி இளைஞர்களும், குழந்தைகளும் தீவிரவாத எண்ணங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அம்மாநில அரசு ஒரு புதுமையான முயற்சியில் இறங்கியிருக்கிறது. அது என்ன தெரியுமா...? கால்பந்து விளையாட்டு. ஆம்...! கால்பந்து விளையாட்டை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தியும், அவர்களை அந்த விளையாட்டில் ஊக்கப்படுத்தியும் பிரிவினைவாத எண்ணங்களை குறைத்து வருகிறது.

காஷ்மீர் பகுதி, அடிக்கடி தீவிரவாதிகளின் தாக்கு தலுக்கு இரையாகும் பகுதி. தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு... என பதற்றமான சூழலிலேயே காஷ்மீர் பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் என்ன கொடுமை தெரியுமா...? பிரிவினைவாதிகள் காஷ்மீர் இளைஞர்களை மூளை சலவை செய்து, அவர்களையே தீவிரவாதிகளாக மாற்றி, தாக்குதல்களை நடத்துகிறார்கள். இத்தகைய தீவிரவாத முயற்சிகளை தடுத்து நிறுத்தவும், காஷ்மீர் இளைஞர்களை நல்வழிப்படுத்தவும்... காஷ்மீர் அரசு கால்பந்து அணிகளை உருவாக்கி இருக்கிறது. இந்த முயற்சியினால்... ஏராளமான குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

‘‘எனக்கு 10 வயதாக இருக்கையில், ஒரு கும்பல் எனக்கு ஆயுத பயிற்சி வழங்கியது. என் கைகளில் ஏராளமான துப்பாக்கிகள் விளையாடின. பாழடைந்த வீட்டிற்குள் பயிற்சி முடிந்ததும், என்னை கடை சந்தையில் இறக்கிவிட்டு, கண்ணில் தென்படுபவர்களை சுட சொன்னார்கள். நல்லவேளையாக துப்பாக்கி பழுதாகி இருந்தது. இல்லையேல் என்ன செய்கிறோம் என்பதை உணராமலேயே பலரது உயிரை பறித்திருப்பேன்’’ என்று பாவமாக பேசுகிறான், ஒரு சிறுவன்.

‘‘பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைப்பதே பிரிவினைவாதிகளின் வேலையாகிவிட்டது. அவர்களின் தாக்குதல் திட்டங்களை அரவணைப்பில்லாத குழந்தைகள், இளைஞர்களின் மூலம் செயல்படுத்துகிறார்கள். அதை தடுப்பதற்காகவே விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். ஆரம்பத்தில் பண்டிபோரா என்ற இடத்தில் மட்டுமே இந்த கால்பந்து அணியை ஆரம்பித்தோம். இதன் வெற்றி, காஷ்மீர் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தது. அதனால் இன்று காஷ்மீர் முழுவதும் கால்பந்து அணிகள் தொடங்கப்பட்டிருப்பதுடன், தீவிரவாத தாக்குதல்களும் குறைந்திருக்கின்றன. எது எப்படியோ, காஷ்மீர் குழந்தைகளின் வாழ்க்கை நல்லபடியாக நகர்கிறது’’ என்கிறார், கால்பந்து பயிற்சியாளர், தாகீர் மெக்பூல்.

கலவர பூமியாக தோற்றமளித்த காஷ்மீரை கால்பந்து அணியின் தாயகமாக மாற்றிய பெருமை தாகீரையே சேரும். இவரது முயற்சியினால் கடந்த இரு வருடங் களாக, காஷ்மீரில் பல கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. சில பகுதிகளில் தங்கும் விடுதிகளுடன் கால்பந்து மைதானங்கள் கட்டமைக்கப்பட்டிருப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பயமின்றி விளையாட அனுப்புகிறார்கள்.

‘‘காஷ்மீர் இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்துவதே இந்த முயற்சியின் வெற்றியாக அமையும். அதை இரண்டு வருடங்களுக்குள் நடத்தி காண்பிப்போம்’’ என்று தன்னம்பிக்கையுடன் விடைபெறுகிறார், தாகீர். 

Next Story