அம்பாசமுத்திரம் அருகே பயங்கரம்: மனைவி சரமாரி வெட்டிக்கொலை நடத்தையில் சந்தேகத்தால் தொழிலாளி வெறிச்செயல்


அம்பாசமுத்திரம் அருகே பயங்கரம்: மனைவி சரமாரி வெட்டிக்கொலை நடத்தையில் சந்தேகத்தால் தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 22 April 2018 2:15 AM IST (Updated: 21 April 2018 9:33 PM IST)
t-max-icont-min-icon

அம்பாசமுத்திரம் அருகே, நடத்தையில் சந்தேகத்தால் மனைவி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

அம்பை, 

அம்பாசமுத்திரம் அருகே, நடத்தையில் சந்தேகத்தால் மனைவி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அடிக்கடி தகராறு 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொன்மா நகரை சேர்ந்தவர் சாராள் (வயது 70). இவருடைய மகள் எப்சி பாய் (32). இவருக்கும், நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள ஆயன்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் (40) என்பவருக்கும் திருமணம் முடிந்து, கிறிஸ்டி (7), பவ்யா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜேந்திரன் பிளம்பிங் தொழிலாளி. எப்சி பாய், 100 நாள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கணக்கு எழுதும் வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே, ராஜேந்திரன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் எப்சி பாய் நடத்தையின் மீதும் ராஜேந்திரன் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

வெட்டிக்கொலை 

இதனை அறிந்த சாராள், எப்சி பாயின் தங்கை செல்வராணி ஆகியோர் நேற்று முன்தினம் ஆயன்குளத்துக்கு சென்றனர். அங்கிருந்த எப்சி பாயையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பொன்மாநகருக்கு சென்று விட்டனர். நேற்று மதியம் ராஜேந்திரன் பொன்மாநகருக்கு சென்றார். அங்கிருந்தவர்களிடம், நான் எப்சி பாயிடம் தனியாக பேச வேண்டும். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே செல்லுமாறு கூறினார்.

அதன்படி சாராள் தனது மகள் செல்வராணி மற்றும் பேத்திகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த ராஜேந்திரனுக்கும், எப்சி பாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து எப்சி பாயை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கணவர் கைது 

முன்னதாக எப்சி பாய் வெட்டுப்பட்டதும் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் சாராள் தனது மகள் செல்வராணி மற்றும் பேத்திகளுடன் திரும்பி வந்தார். எப்சி பாய் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை பார்த்து அனைவரும் கதறி அழுதனர்.

மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி, சப்–இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், விமல்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், எப்சி பாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story