வருங்கால சமுதாயம் வளர்ச்சி பெற நல்ல பழக்க வழக்கங்கள், கலாசாரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்


வருங்கால சமுதாயம் வளர்ச்சி பெற நல்ல பழக்க வழக்கங்கள், கலாசாரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 April 2018 4:00 AM IST (Updated: 22 April 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

வருங்கால சமுதாயத்திற்கு நல்ல பழக்க வழக்கங்கள், கலாசாரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக 12-வது குடிமைப் பணிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசினார்.

எல்லோரும் குழந்தைகள் தினம் என பல்வேறு தினங்கள் கொண்டாடுவதுபோல், பணியில் இருக்கும் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான தினம் தான் குடிமைப் பணிகள் தினம்.

சர்தார் வல்லபாய் படேல் தான் குடிமைப் பணிகளின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். இன்று பிறக்கும் குழந்தைகளில் 1000-க்கு 5 குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையுடனும், 25 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாகவும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் தாய் பலவீனமாக இருப்பதும், 18 வயதிற்குள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதாலும் வருகிறது.

அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் சத்தான உணவு, கல்வி, ஆரோக்கியமான சூழ்நிலையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இங்கு வைக்கபட்டிருந்த கண்காட்சி அரங்கில் 1-ம் வகுப்பு படிக்கும் குழந்தை பாட்டு, திருக்குறள் நன்றாக கூறினார். ஆனால் எழுத்தை அடையாளம் காணமுடியவில்லை. இந்த காலத்தில் குழந்தைகளுக்கு எழுத்துக்களை அடையாளம் கண்டு உச்சரிக்கும் திறனை வளர்க்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளுக்கு சேவை செய்யும் எண்ணத்தை கடைசி வரை கடைபிடிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களை அடையாளம் கண்டு உச்சரிக்க கற்றுத்தந்தால் தமிழ் வார்த்தைகள் தானாக வந்து விடும். இது தான் தாய் மொழியான தமிழின் சிறப்பு. வருங்கால சமுதாயம் உங்கள் கையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்கள், கலா சாரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கத்தினை அங்கன்வாடி குழந்தைகளுடன் சேர்ந்து கலெக்டர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்காட்சி அரங்கில் குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும் திறன் குறித்து கேட்டறிந்தார். மேலும் நேரு, பாரதியார், அப்துல்கலாம் உள்பட பல்வேறு மாறுவேடங்களில் இருந்த குழந்தைகளுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, திட்ட அலுவலர் தமிழரசி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Next Story