மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பிரச்சினை: நிர்மலாதேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை


மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பிரச்சினை: நிர்மலாதேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 22 April 2018 4:15 AM IST (Updated: 22 April 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவியுடன் தொடர்புடைய பல்கலைக்கழக அதிகாரிகள் யார்-யார் என முழு விவரம் பெற கடந்த 2 நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு செல்போன் மூலம் அழைத்ததாக கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் அந்த கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலாதேவி அருப்புக்கோட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வழக்கின் முக்கியத்துவம் கருதி இதுபற்றிய விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முத்துசங்கரலிங்கம், சாஜிதாபேகம், கருப்பையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ள 9 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 30 பேரை கொண்ட 9 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த, சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கீதா அனுமதி வழங்கினார். விசாரணை முடிந்து வருகிற 25-ந்தேதி மதியம் 2 மணிக்குள் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிர்மலாதேவியை தங்கள் காவலில் எடுத்து விருதுநகர் கொண்டு வந்தனர். இங்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி தகுதி சான்றிதழ் பெற்ற பின்னர் அவரை கலெக்டர் அலுவலக வளாகத்தின் அருகில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள முதல் மாடியில் நேற்று முன்தினம் இரவு நிர்மலாதேவியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி விசாரணையை தொடங்கினார். வீடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது.

முதல்நாள் விசாரணை பற்றி விசாரணை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது நிர்மலாதேவி ஏற்கனவே மாவட்ட போலீசாரிடம் தெரிவித்த தகவல்களை தெரிவித்தார் என்றும், புதிய தகவல்கள் ஏதும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கத் தூண்டியதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 2 பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டதாக தெரிவித்த அந்த போலீஸ் அதிகாரி 2-வது நாள் விசாரணையின் போது நிர்மலாதேவியிடம் இருந்து முழு தகவல்களையும் பெற முடியும் என்றார்.

அந்த பேராசிரியர்கள் 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வரும் நிலையில் அவர்களை பற்றி தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும், அவர்கள் இருவர் மீதும் பல்கலைக்கழக நிர்வாகம் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அதிகாரி, விரைவில் அவர்கள் இருவரும் போலீஸ் பிடியில் சிக்குவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். நிர்மலாதேவியை கல்லூரி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்தவுடன் அதனை ரத்து செய்யுமாறு பல்கலைக்கழகத்தில் இருந்து பரிந்துரைத்த அதிகாரிகள் யார் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

நேற்று காலை சி.பி.சி.ஐ.டி. அலுவலக மாடியில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி 2-வது நாள் விசாரணையை தொடங்கினார். நிர்மலாதேவிக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார்-யாருடன் தொடர்பு இருந்தது என்பது பற்றிய முழு விவரத்தை பெற விசாரணையின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி தீவிரம் காட்டியதாக கூறப்படுகிறது.

ஆனாலும் நிர்மலாதேவி விசாரணை அதிகாரிகளின் கேள்விக்கு ஒரு சில வார்த்தைகளிலேயே பதில் கூறியதாகவும், முழு விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் முழு விவரங்களை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விசாரணை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

2-வது நாள் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வரழைக்கப்பட்ட மருத்துவர்கள் நிர்மலாதேவிக்கு மருத்துவ பரிசோதனை செய்து விட்டுச் சென்றனர்.

இதற்கிடையில் நிர்மலாதேவிக்கான உடைகள் அடங்கிய பையுடன் அவருடைய சகோதரர் ரவி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு வந்தார். அவரும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். அவர் சிறிது நேரம் நிர்மலாதேவியுடன் பேசி விட்டுச்சென்றார். 

Next Story