சுங்கச்சாவடி ஊழியரை தாக்கி பெண்ணிடம் நகை பறிப்பு


சுங்கச்சாவடி ஊழியரை தாக்கி பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 22 April 2018 4:00 AM IST (Updated: 22 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே சுங்கச்சாவடி ஊழியரை தாக்கி பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே வி.சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). இவர் விக்கிரவாண்டியில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைமணி (26). இவர்களுக்கு அஸ்வந்த் (3), பிரதீப் (1½) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு காற்றுக்காக பின்பக்க கதவை திறந்து வைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 3 பேர் நேற்று அதிகாலை வீட்டின் பின்பக்கம் வழியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த கலைமணியின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.அப்போது கண்விழித்து எழுந்த கலைமணி, தனது தங்கச்சங்கிலியை பறிக்க விடாமல் இறுக்க பிடித்துக்கொண்டபடி திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு எழுந்த சுரேஷ், அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள் சுரேசை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

பின்னர் கலைமணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.

மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த சுரேசை அவரது மனைவி கலைமணி, அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story