திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில், அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த 172 பேர் விண்ணப்பம்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை முறைப்படுத்த 172 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அங்கீகரிக்கப்படாத 2,500 வீட்டுமனைகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், திண்டுக்கல் நகரை சுற்றி உள்ள பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, அடியனூத்து ஆகிய பஞ்சாயத்துகளில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வீட்டுமனைகளை முறைப்படுத்த மாநகராட்சி மூலம் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, நேற்று திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள நாயுடு மகாஜன திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், மாநகராட்சி கமிஷனர் மனோகர், நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன், உதவி நகரமைப்பு அலுவலர் உதயகுமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில், மனை வரைபடம், பட்டா, சிட்டா, அடங்கல் நகல், பதிவு செய்யப்பட்ட பத்திர நகல், ஒரு வாரத்துக்கு முந்தைய வில்லங்க சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து முறைப்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று நடந்த முகாமில் 172 பேர் தங்களது வீட்டுமனைகளை முறைப்படுத்த விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள், மனைப்பிரிவுகளை முறைப்படுத்த கடந்த 20-10-2016-க்கு முன்பாக பத்திர பதிவு செய்திருக்க வேண்டும். மனைப்பிரிவு உரிமையாளர் அல்லது மனுதாரர் www.tnl-ay-out-r-eg.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அடுத்த மாதம் (மே) 3-ந்தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பித்து மாநகராட்சி அலுவலகத்தில் உரிய கட்டணம் செலுத்தி முறைப்படுத்தி கொள்ளலாம்.
தவறினால், மனையில் கட்டிடம் கட்ட வரைபட அனுமதி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வரிவிதிப்புகள் மற்றும் இதர சலுகைகள் ஏதும் வழங்க இயலாது. அங்கீகரிக்கப்படாத மனைகளை விற்பனை செய்யவும், பத்திரப்பதிவு செய்யவும் இயலாது.
இதற்கிடையே வீட்டுமனைகளை முறைப்படுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, மாநகராட்சி பகுதியில் ஒரு சதுர அடி வீட்டுமனைக்கு ரூ.56-ம், ஊராட்சி பகுதிகளில் ரூ.6-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே, திண்டுக்கல்லுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story