வரதட்சணை வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


வரதட்சணை வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 22 April 2018 4:45 AM IST (Updated: 22 April 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

வரதட்சணை வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தேரழந்தூர் சிவன்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 31). காரைக்கால் பட்டம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி(28). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் வரதட்சணை கேட்டு செந்தில், அவரது தாய் கன்னிகா, சகோதரிகள் ரூபா, சுபா, செந்திலா ஆகியோர் தன்னை துன்புறுத்தியதாக ராஜலட்சுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி(53) கடந்த 10-ந் தேதி விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செந்தில் மற்றும் அவரது தாய் கன்னிகா, சகோதரிகள் ரூபா, சுபா, செந்திலா ஆகிய 5 பேர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்திலின் அண்ணன் குகன்(32) போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணியை சந்தித்து பேசினார்.

அப்போது வழக்கு தொடர்பாக 5 பேரையும் கைது செய்யாமல் காலம் கடத்துவதற்கும், மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என குகனிடம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத குகன் இது குறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்திமதிநாதன், ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் ராணியை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று இன்ஸ்பெக்டர் ராணியிடம், ரசாயன பவுடர் தடவிய நோட்டுகள் ரூ.30 ஆயிரத்தை கொடுக்குமாறு கூறினார். அதன்படி குகன் நேற்று மதியம் 1 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது போலீஸ் நிலையத்தில் லஞ்ச தொகையை பெறுவதற்காக காத்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, குகனை பார்த்ததும் அவரை வரவேற்று பேசிக்கொண்டிருந்தார். தான் லஞ்சம் வாங்குவதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக இன்ஸ்பெக்டர் ராணி, போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் உள்ளிட்டோருக்கு ஒரு வேலையை கொடுத்து, அவர்களை அங்கிருந்து வெளியே அனுப்பினார்.

உடனே குகன், ரூ.30 ஆயிரத்தை இன்ஸ்பெக்டர் ராணியிடம் கொடுத்து விட்டு அந்த பகுதியில் பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு காந்திமதிநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவள்ளி மற்றும் போலீசார் பணத்துடன் இன்ஸ்பெக்டர் ராணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் இரவு 8 மணிக்கு இன்ஸ்பெக் டர் ராணியின் முகத்தை சேலையால் மூடியபடி போலீசார் காரில் ஏற்றி மயிலாடுதுறை போலீஸ் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் இன்ஸ்பெக்டர் ராணியை போலீசார் நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். 

Next Story