ஜனாதிபதிக்கு 1 லட்சம் கடிதம் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு 1 லட்சம் கடிதம் அனுப்புவது என சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம்,
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம், மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி செயலாளர் முல்லை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா முன்னிலை வகித்தார்.
சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரமோகன், வக்கீல் அணி மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் மாணிக்கம், வெண்ணிலா சேகர், பாலு, முருகேசன், கவுதமன், சக்ரவர்த்தி, காமராஜ், விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி நாளை(திங்கட்கிழமை) நடைபெறும் மனித சங்கலி போராட்டத்தில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் ஆயிரக்கணக்கில் திரண்டு, கோரிக்கையை எடுத்துரைக்க வேண்டும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற தலைமை கழக அறிவிப்பின்படி சேலம் கிழக்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் 1 லட்சம் கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பின்னர் அதற்கான கடிதங்களை சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மகளிர் அணியினரிடம் வழங்கினார்.
வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,136 வாக்குச்சாவடிகளுக்கும் ஏற்கனவே வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது தி.மு.க. தலைமை கேட்டுக்கொண்டபடி, மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் வாக்குச்சாவடி வாரியாக குழு ஒன்றை அமைப்பது என்றும், ஒரு வாக்குச்சாவடிக்கு 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவில் 5 மகளிர், 5 இளைஞர்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story