அறிவுப் பசியை போக்கிய மாட்டு வண்டி நூலகம்
நூல்கள் மனிதர்களை சிறந்தவர்களாக, பண்புள்ளவர் களாக, அறிவாளிகளாக ஆக்குகிறது. இன்றைய காலகட்டத்தில் நூலகங்கள் இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம்.
நூல்கள் மனிதர்களை சிறந்தவர்களாக, பண்புள்ளவர் களாக, அறிவாளிகளாக ஆக்குகிறது. இன்றைய காலகட்டத்தில் நூலகங்கள் இல்லாத இடங்களே இல்லை என்று கூறலாம். விஞ்ஞான உலகில் நாம் வளர்ச்சியடைந்து வருகிறோம். உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நாம் நொடிப்பொழுதில் காண்கிறோம். அந்த அளவிற்கு அறிவியல் தொழில்நுட்பம் நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நவீன தொழில்நுட்பம் மூலம் நாம் பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டாலும் நூல்கள்தான் படிக்க, படிக்க தெவிட்டாத, பல்வேறு அறிஞர்கள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை நமக்கு எடுத்துக்கூறுகிறது. அதனால் நூலகங்களை தேடிச்செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. இன்று நூலகங்களும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வளர்ச்சியடைந்துதான் வருகின்றன. இப்போது நூலகங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அறிவியல் தொழில்நுட்பம் வளராத பழைய காலத்தில் மக்களை தேடி நூல்களை கொண்டு சென்று வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக 1857-ம் ஆண்டில் லண்டனில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் நடமாடும் நூலகம் இருந்திருக்கிறது. அது நம் தமிழகத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான(தற்போது திருவாரூர் மாவட்டம்) மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் கிராமத்தில் தொடங்கப்பட்டிருந்திருக்கிறது. மேல வாசல் கிராமத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந் தேதி இந்த நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தை தொடங்கியவர் எஸ்.வி.கனக சபைபிள்ளை. என்ஜினீயரான இவர், தனது சொந்த முயற்சியால் தானே முதலீடு செய்து இந்த நடமாடும் நூலகத்தை உருவாக்கி உள்ளார். இதனை நூலகத்தந்தை என்று அழைக்கப்படும் எஸ். ஆர்.ரெங்கநாதன் தொடங்கி வைத்துள்ளார். இந்த முதல் நடமாடும் நூலகத்தின் மாதிரியும், நடமாடும் நூலகத்தின் புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அந்த காலக்கட்டத்தில் வாகன வசதி இல்லாத நிலையில் மாட்டு வண்டியில் நூல்களை அடுக்கிக்கொண்டு மன்னார்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு நூல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதன் மூலம் 98-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர். மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலவசமாக நூல்கள் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. இதற்காக மாட்டு வண்டியில் புத்தகங்களை வைப்பதற்காக மரத்தில் செய்யப்பட்ட அடுக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
1933-ம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக திருவிழா நடந்தது. அப்போதும் இந்த நடமாடும் நூலகத்தை எஸ்.ஆர்.ரெங்கநாதன் பயன்படுத்தி உள்ளார். கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 1933-ம் ஆண்டு பிப்ரவரி 25 முதல் மார்ச் 20-ந் தேதி வரை நூலக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அப்போது கும்பகோணம் நகரில் மாட்டு வண்டியிலும், சைக்கிள் சக்கரத்துடன் கூடிய கைவண்டியிலும் நடமாடும் நூலகம் இயங்கியிருக்கிறது. மேலும் ‘சிலைடுகள்’ மூலமும் காண்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் அதற்கு முன்பு இத்தகைய நடமாடும் நூலகங்கள் இருந்ததாக குறிப்புகள் இல்லை. அதனால் இந்த மாட்டு வண்டியிலான நடமாடும் நூலகம்தான் இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் என்று கூறப்படுகிறது.
இந்த நடமாடும் நூலகத்தில் பயணம் செய்த 3 ஆயிரம் நூல்கள் தற்போது தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நூல்கள் அனைத்தும் 100 பக்கங்களுக்கும் குறைவானவையே ஆகும். ஒரு சில நூல்கள் மட்டும் 300 பக்கங்களை கொண்டதாக உள்ளது. இதில் ஒழுக்கக்கல்வி மட்டும் அல்லாது அறிவியல் கல்வி, மருத்துவ கல்வி, சமூக கல்வி, தத்துவம், நீதி போதனை பற்றிய நூல்களும் இருக்கின்றன.
இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக நூலகர் சிவக்குமார் கூறுகையில், ‘மேலவாசல் கிராமத்தில் எஸ்.வி.கனகசபைபிள்ளை நூலகம் வைத்திருந்தார். அவருடைய மறைவுக்குப்பின்னர் கவுமார குருகுலம் அதனை நடத்தி வந்துள்ளது. தற்போது உள்ள நூல்களில் கூட அவர்களுடைய பெயர் தான் இடம் பெற்றுள்ளது. இந்த நூலகத்தில் இரட்டை மாட்டுவண்டியில் நடமாடும் நூலகமும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த காலத்தில் மேலவாசல் நூலகத்தை அணுகி நடமாடும் நூலகம் தங்களது கிராமத்துக்கு தேவை எனக்கூறினால் இலவசமாக அனுப்பிவைத்திருக்கிறார்கள். நடமாடும் நூலகத்தை பயன் படுத்த விரும்புகிறவர்கள், அவர்களது ஊரில் இருந்து காளைமாடுகளை அழைத்து வந்து வண்டியில் பூட்டி ஓட்டிச்சென்று, நூலகத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இது கிராம மக்களின் அறிவுப் பசியை தீர்த்துவைத்திருக்கிறது’ என்றார்.
Related Tags :
Next Story