நிதி ஒதுக்கியும், இடம் ஒதுக்கீடு செய்யவில்லை: செங்குன்றத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


நிதி ஒதுக்கியும், இடம் ஒதுக்கீடு செய்யவில்லை: செங்குன்றத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்படுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 23 April 2018 4:00 AM IST (Updated: 23 April 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை தவிர்க்க துணை மின்நிலையம் அமைக்க நிதி ஒதுக்கியும், இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே துணை மின்நிலையம் அமைக்க தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தில் 150-க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள், 300-க்கும் மேற்பட்ட நெற்களங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் உள்ளன. செங்குன்றம், நாரவாரிக்குப்பம் மற்றும் அதன் அருகில் உள்ள புழல், காவாங்கரை, கதிர்வேடு, விளங்காடுபாக்கம், வடபெரும்பாக்கம், வடகரை, அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புழலில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்துதான் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் செங்குன்றம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்தடையால் அரிசி ஆலைகளும் இயங்க முடியாததால் அரிசி உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது.

நிதி ஒதுக்கியும், இடம் ஒதுக்கவில்லை

எனவே செங்குன்றத்துக்கு என்று தனியாக ஒரு துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என அரசிடம் செங்குன்றத்தில் உள்ள அனைத்து சங்கத்தினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று செங்குன்றத்துக்கு தனி துணை மின்நிலையம் அமைக்க உத்தரவிட்ட அரசு, அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் துணை மின்நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 50 சென்ட் நிலமாவது தேவைப்படும் என செங்குன்றம் மின்வாரியம் சார்பில் மின்வாரிய துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் பல முறை கோப்புகள் அனுப்பியும், இதுவரையிலும் மாவட்ட நிர்வாகம் துணை மின்நிலையம் அமைக்க தேவையான இடத்தை ஒதுக்கீடு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

நிலம் ஒதுக்க கோரிக்கை

செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் அருகே அரசுக்கு சொந்தமான 60 சென்டுக்கும் மேற்பட்ட இடம் உள்ளது. செங்குன்றம் பாடியநல்லூர் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகிலும் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.

இவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை துணை மின் நிலையம் அமைக்க ஒதுக்கீடு செய்தால் மின்வாரியம் உடனடியாக துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளும். துணை மின்நிலையம் அமைத்துவிட்டால் செங்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. வருகிற கோடை காலத்தில் மின்சாரம் தடைப்பட்டு அவதிக்கு உள்ளாகும் நிலைமையும் தவிர்க்கப்படும்.

எனவே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, இதில் தனி கவனம் செலுத்தி துணை மின்நிலையம் அமைக்க உடனடியாக நிலம் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்பட பல்வேறு சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்குன்றத்தில் மின்தடையை தவிர்க்க விரைவில் துணை மின்நிலையம் அமைக்கப்படுமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Next Story