லோக் அதாலத்தில் சமரசம்: விவாகரத்து கோரிய தம்பதி இணைந்தனர்


லோக் அதாலத்தில் சமரசம்: விவாகரத்து கோரிய தம்பதி இணைந்தனர்
x
தினத்தந்தி 23 April 2018 3:15 AM IST (Updated: 23 April 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் விவாகரத்து கோரிய தம்பதியர் சமரசம் ஏற்பட்டு, நிதிபதி முன்னிலையில் இணைந்தனர்.

ராமநாதபுரம்,

சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதிபதி அனில்குமார், சப்-கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்குமார் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர். இதில் மாவட்ட நீதிபதி கயல்விழி பேசியதாவது:- கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், மணவாழ்க்கை பிரச்சினை வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமரசம் காணக்கூடிய வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

மேலும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் வழக்குகளில் 1,650 வழக்குகள் மற்றும் 400 வங்கி வழக்குகள் சமரச தீர்வு காணக்கூடிய வழக்குகளாக கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே உள்ள புல்லந்தையை சேர்ந்தவர் பூமிநாதன். இவரின் மகன் வெங்கடேசன் கீழக்கரை தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு சைக்கிளில் கல்லூரி முடிந்து வந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோதி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக மகனின் இறப்பிற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பூமிநாதனுக்கு திருச்சி இன்சூரன்சு நிறுவனம் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கியது.

இதேபோல, சாத்தக்கோன்வலசை பிள்ளை மடம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் உச்சிப்புளி ரெயில்வே கேட் பகுதியில் நடந்த விபத்தில் பலியானார். இவருடைய மனைவி ஜெயா தொடர்ந்த வழக்கில் ரூ.9 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடாக இன்சூரன்சு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டது. தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின் ஜெயக்குமார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பேய்க்கரும்பு பகுதியில் நடந்த விபத்தில் பலியானார். அவரின் மனைவி சாந்திமேரி ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததில் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் இழப்பீடாக இன்சூரன்சு நிறுவனம் வழங்கியது. இந்த விபத்து வழக்குகளில் இன்சூரன்சு நிறுவனங்கள் வழங்கிய தொகைக்கான காசோலைகளை மாவட்ட நீதிபதி கயல்விழி சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கினார்.

வேதாளை பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற ராஜேஷ் (வயது 36). அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீவித்யா. இவர்களுக்கு பிவிஷ்தேவ் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கிடையேயான விவாகரத்து வழக்கு ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் ராமநாதபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையிலான குழுவினர் அவரவர் வக்கீல்கள் மூலம் இருதரப்பினரிடமும் கவுன்சிலிங் முறையில் பேச்சுவார்த்தை நடத்தி மனஒற்றுமை ஏற்படுத்த முயன்றனர். இந்த முயற்சியின் பயனாக கணவன்-மனைவி இருவரும் தங்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மனகசப்பு சம்பவங்களை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்த நீதிபதிகள் எந்த பிரச்சினைக்கும் விட்டுக்கொடுத்து பேசித்தீர்த்து கொள்வதுதான் தீர்வாகும் என்று அறிவுரை கூறினர்.

Next Story