ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்: மீனவர்கள் மத்தியில் பீதி


ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்: மீனவர்கள் மத்தியில் பீதி
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள் வாங்கியதால் மீனவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் 21-ந்தேதி முதல் 2 நாட்களுக்கு கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், அரிச்சல் முனை, தனுஷ்கோடி மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடந்த 2 நாட்களுக்கு கடலில் இறங்கி நீராடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று உப்பூர் அருகே உள்ள திருப்பாலைக்குடி கடற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக நேற்று சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியது. மணற் பரப்பாக காணப்பட்ட கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகள் தரை தட்டி நின்றன. பகல் முழுவதும் உள் வாங்கிய நிலையில் காணப்பட்ட கடற்பகுதி மாலையில் கடல் மீண்டும் ஏறியதால் சகஜ நிலைக்கு திரும்பியது. திருப்பாலைக்குடி பகுதியில் வழக்கத்துக்கு மாறாக கடல் வாங்கி காணப்பட்டதால் மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி கடலில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஆங்காங்கே எச்சரிக்கை தொடர்பான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. மீனவர்களும் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

நேற்று தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிக அளவில் இருந்தது. இதனால் தனுஷ்கோடி செல்ல எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறையின் காரணமாக அதிகளவில் வந்திருந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். போலீசார் கடலோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அக்னி தீர்த்த கடல் வழக்கம் போல் இருந்தது. இருப்பினும் யாரும் கடலில் இறங்கி குளிக்கக்கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக வந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கரையிலேயே குளித்து விட்டு பூஜைகளை மேற்கொண்டனர்.

இதனிடையே ஓலைக்குடா, சங்குமால் கடற்கரையில் சுமார் 200 அடி தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால் கடலுக்குள் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் தரைதட்டி நின்றன. திடீரென கடல் உள் வாங்கியதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. பின்னர் மாலையில் கடல் தண்ணீர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. 

Next Story