கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பரிசல் சவாரி களை கட்டியது.

பென்னாகரம்,

கோடை விடுமுறையையொட்டி தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பரிசலில் சென்றும் மகிழ்வார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும், குறைந்தது. இதனால் ஒகேனக்கல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,700 கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைந்தது.

கோடை விடுமுறையையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் பாறைகளுக்கு இடையே பரிசலில் சென்றனர். சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல ஆர்வம் காட்டியதால் பரிசல் சவாரி களை கட்டியது. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மீன் விற்பனை மற்றும் மீன் வறுவல் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பஸ் நிலையம், நடைபாதை, தொங்குபாலம், பார்வை கோபுரம் மற்றும் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலை மோதியது. ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்று பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல் மீண்டும் களை கட்ட தொடங்கியது. 

Next Story