மீன்பிடி தடைக்காலத்தையொட்டி காரைக்காலில் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்


மீன்பிடி தடைக்காலத்தையொட்டி காரைக்காலில் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலத்தையொட்டி காரைக்காலில் படகுகள், வலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காரைக்கால்,

ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலத்தை அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இந்த தடைக்காலத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் பின்பற்றி வருகின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமங்களில் இருந்து சுமார் 420 விசைப்படகு மூலம் 9 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். தற்போது மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் காரைக்கால் மாவட்ட மீனவர்களின் விசைப்படகுகள் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தங்களது மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது நீக்குவதிலும், புதிய வர்ணம் தீட்டுவதிலும் தீவிரம் காட்டிவருகின்றனர்.

நிவாரணம்

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் அவர்கள் குடும்பத்துக்கு புதுச்சேரி அரசு தலா ரூ.4 ஆயிரம் மின்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கி வருகிறது. இதைப்போல விசைப்படகுகளை சீரமைக்க ரூ.20 ஆயிரமும், பைபர் படகுகளை சீரமைக்க ரூ.5 ஆயிரமும் மானியமாக வழங்கி வருகிறது. இந்த தொகை போதுமானதாக இல்லை. எனவே தடைக்கால நிவாரணத்தை ரூ.8 ஆயிரமாகவும், படகுகளை சீரமைக்க தற்போது வழங்குவது போல 2 மடங்கு நிதியும் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story