சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் சீற்றம் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை


சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் சீற்றம் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்ல தடை இல்லாததால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, ராவுத்தன்வயல், செந்தலைவயல், செம்பியன்மாதேவிப்பட்டினம் உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பாய்மர படகு, பைபர்கிளாஸ் படகு, கட்டுமரங்கள் உள்பட 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேதுபாவாசத்திரம் பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடற்கரை பகுதியில் சூறைக்காற்று வீசியது. கடலில் ராட்சத அலைகள் அடிக்கடி எழுந்தன. இதன் காரணமாக நேற்று 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று மீன் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடைகளில் மீன்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மீன் வரத்து இல்லாததால் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கட்டுமாவடி, உடையநாடு ஆகிய இடங்களில் உள்ள மீன் சந்தைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நாட்டுப்படகுகள் சேதுபாவாசத்திரம், மல்லிப் பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Next Story