கொலை வழக்கில் தொடர்புடையவரை தேடி வந்தபோது கலவரம்: தனியார் தொழிற்சாலை சூறை; லாரிக்கு தீவைப்பு, போலீசார் தடியடி


கொலை வழக்கில் தொடர்புடையவரை தேடி வந்தபோது கலவரம்: தனியார் தொழிற்சாலை சூறை; லாரிக்கு தீவைப்பு, போலீசார் தடியடி
x
தினத்தந்தி 23 April 2018 5:30 AM IST (Updated: 23 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபர் கொலை வழக்கில் தொடர்புடையவரை தேடி திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வந்த அவருடைய ஆதரவாளர்களால் தொழிற்சாலை சூறையாடப்பட்டது. மேலும் அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தி லாரிக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருபுவனை,

புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்தவர் வேலழகன், தொழில் அதிபர். இவர் தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி வந்தார். மேலும் பல தொழில் களையும் நடத்தி வந்தார்.

இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு தொழில் அதிபர் வேலழகன் வெடிகுண்டுகள் வீசி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி திருபுவனையில் உள்ள தனியார் தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவர் உதயக்குமார் மற்றும் சிலரை கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட உதயக்குமார் மீது போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து உதயக்குமார் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து உதயக்குமார் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் திருபுவனையில் உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் உதயக்குமார் நேற்றுக்காலை பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள தனியார் தொழிற்சாலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அது பற்றிய தகவல் படுகொலை செய்யப்பட்ட வேலழகன் உறவினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு தெரிய வந்தது. இந்த தகவலால் ஆத்திரமடைந்த வேலழகனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள், உதயக் குமாரை தேடி தனியார் தொழிற்சாலைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால் அவர்கள் மேலும் ஆத்திரம் அடைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையின் காவலாளி அறை, வரவேற்பறை ஆகியவற்றில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார் கள். தொழிற்சாலை வளாக நடைபாதையில் இருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து வீசி எறிந்தனர்.

மேலும் தொழிற்சாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். மேலும் தொழிற்சாலைக்கு பொருட் களை ஏற்ற வந்த கன்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார் கள். இதனால் தொழிற்சாலை வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

அந்த கும்பலில் இருந்த சிலர் தொழிற்சாலைக்கு பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிக்கு தீ வைத்தனர். இதில் லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் லாரியில் பிடித்த தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் லாரி முன்பக்கத்தில் ஒரு பகுதி கருகி சேதம் அடைந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் கள் பிரியா, பிரதாபன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலைக்கு வந்து பார்வையிட்டு நிலைமையின் விபரீதம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும் திருபுவனைக்கு அருகில் உள்ள திருக்கனூர், மடுகரை, நெட்டப்பாக்கம் உள்ளிட்ட போலீஸ் நிலைய போலீசாரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

கலவரத்தில் ஈடுபட்ட கும்பலை திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். அதனை அறிந்ததும் கலவரக் கும்பல் போலீசாரின் செல்போன்களை பறித்து உடைத்து நொறுக்கி வீசியது. தொடர்ந்து அந்த கும்பல் ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

அதைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கலவர கும்பல் மீது தடியடி நடத்தினார்கள். இந்த தடியடியில் கலவர கும்பலை சேர்ந்த ஒரு வாலிபரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது.

போலீசாரின் தடியடியை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறினார்கள். பின்னர் அந்த கும்பல் திருபுவனை சந்திப்பு பகுதியில் புதுச்சேரி-விழுப்புரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்குபோக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த கடைக்காரர்களை கடைகளை அடைக்கும்படி அந்த கும்பல் மிரட்டியது. அதனால் பயந்துபோன வியாபாரிகள் அவசரம் அவசரமாக தங்கள் கடைகளை அடைத்தனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் தொழிற்சங்க தலைவர் உதயக்குமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல் பற்றி தகவல் அறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோர் போலீஸ் படையுடன் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக திருபுவனையில் நேற்று பெரும் பதற்றம் நிலவியது. தொடர்ந்து அங்கு பதற்றமான நிலையை காணப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் தொழிற்சாலை பகுதியிலும், திருபுவனை சந்திப்பு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போலீஸ் ரோந்து மற்றும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த கலவரம் தொடர்பாக திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Next Story