நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.90 ஆயிரம் பறித்து சென்ற 3 பேர் கைது


நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.90 ஆயிரம் பறித்து சென்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2018 3:45 AM IST (Updated: 23 April 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே தனியார் நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.90 ஆயிரத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருபவர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த செந்தில்(வயது 28). இவர் நேற்று முன்தினம் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.90 ஆயிரத்தை எடுத்து தனது பையில் வைத்து தோளில் மாட்டிக்கொண்டு, திருச்சியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு பஸ்சில் செல்வதற்காக மணக்கால் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.

இதற்கிடையில் அவருக்கு திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கழிவறையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, பணம் இருந்த பையுடன் சென்றார். இந்நிலையில் மணக்கால் பகுதியை சேர்ந்த டென்னீஸ்(23), பாலாஜி(22), நாகராஜன்(26), தீனா என்கிற தீனதயாளன் ஆகியோர் திடீரென்று செந்திலை கீழே தள்ளிவிட்டு பையை பறித்து சென்றனர். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் பேரில் லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

அப்போது, பணத்தை பறித்து சென்ற 4 பேரும் அன்பில் பகுதியில் உள்ளதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று டென்னீஸ், பாலாஜி, நாகராஜன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரத்தை மீட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள தீனா என்கிற தீனதயாளனை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story