மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி சாவு


மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி சாவு
x
தினத்தந்தி 23 April 2018 4:30 AM IST (Updated: 23 April 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே நாயை மீட்கச்சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி அக்காள்-தம்பி பரிதாபமாக இறந்தனர்.

மொடக்குறிச்சி,

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன் (வயது 55). இவருடைய மனைவி செல்வி (50). 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு குமரேசன் (28), சிலம்பரசன் (22) என 2 மகன்களும், சத்யா (25), ஜெகதீஸ்வரி (24), காஞ்சனாதேவி (21) என 3 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் இவர்கள் 5 பேரும் நேற்று மதியம் நண்பர்கள் 6 பேருடன் மொடக்குறிச்சி அருகே காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள நட்டாற்றீசுவரர் கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். உடன் தங்கள் வீட்டில் வளர்த்த நாயையும் அழைத்து சென்றார்கள். கோவிலில் 11 பேரும் சாமி கும்பிட்டனர்.

இதைத்தொடர்ந்து 11 பேருக்கும் ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் நேற்று மாலை கோவிலுக்கு அருகே காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது ஜெகதீஸ்வரி வளர்த்து வரும் நாய் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டது. இதனை கவனித்த சிலம்பரசனும், ஜெகதீஸ்வரியும் நாயை கரைக்கு தள்ளிவிட்டார்கள். ஆனால் அவர்கள் 2 பேரும் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கினார்கள். இதனை கவனித்த அவர்களுடைய நண்பர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து அவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும் நாமக்கல் மாவட்ட போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிலம்பரசன் மற்றும் ஜெகதீஸ்வரியை தேடினார்கள். சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கிய சிலம்பரசனின் உடல் மீட்கப்பட்டது. சிலம்பரசன் மூழ்கி இறந்த சிறிது தூரத்தில் ஜெகதீஸ்வரி யின் உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டார்கள்.

பின்னர் அவரது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களுடைய சகோதரர், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story