தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு மாரத்தான் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு


தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு மாரத்தான் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 23 April 2018 5:00 AM IST (Updated: 23 April 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் நடந்த தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 2 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

ஈரோடு,

இந்திய மருத்துவ சங்கம், ஒளிரும் ஈரோடு, இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய இளைஞர்கள் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் உடல் ஆரோக்கியம் மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் ஆகிய 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

21 கிலோ மீட்டர் ஓட்டத்தை தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் வீரர்களுடன் சைலேந்திரபாபுவும் 21 கிலோ மீட்டர் தூரம் ஓடினார்.

இந்த மாரத்தான் ஓட்டம் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இருந்து தொடங்கி சத்தி ரோடு, சுவஸ்திக் கார்னர், எல்லை மாரியம்மன் கோவில், பார்க் ரோடு, பவானி ரோடு, பி.பி.அக்ரஹாரம், பெருமாள் மலை, ஆவின் அலுவலகம், சித்தோடு சத்தி ரோடு, கனிராவுத்தர் குளம் வழியாக சென்று மீண்டும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதேபோல் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் டாக்டர் ஜெ.ஏ.ஜெயலால், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.சீனிஅஜ்மல்கான் ஆகியோரும், 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் அக்னி சின்னசாமி ஆகியோரும் தொடங்கி வைத்தனர். 10 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இருந்து தொடங்கி சத்தி ரோடு, சுவஸ்திக் கார்னர், எல்லை மாரியம்மன் கோவில், பார்க் ரோடு, பவானி ரோடு, பி.பி.அக்ரஹாரம், கனிராவுத்தர்குளம் வழியாக சென்று மீண்டும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நிறைவடைந்தது.

இதேபோல் 5 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இருந்து தொடங்கி சத்தி ரோடு, சுவஸ்திக் கார்னர், எல்லை மாரியம்மன் கோவில், பார்க் ரோடு, பவானி ரோடு, அசோகபுரம், 16 ரோடு, வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோவில் வழியாக சென்று மீண்டும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் நிறைவடைந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூ.21 ஆயிரமும், ஹெலிகாப்டர் பயணத்துக்கான டிக்கெட்டும், 2-வது பரிசாக ரூ.16 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.11 ஆயிரமும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒளிரும் ஈரோடு அமைப்பின் செயலாளர் கணேசன், பொருளாளர் ஞானவேல், துணைத்தலைவர் வெங்கடேஸ்வரன், மாரத்தான் தலைவர் டாக்டர் அபுல்ஹசன், இந்திய தொழில் கூட்டமைப்பு ஈரோடு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், இந்திய இளைஞர் அமைப்பு தலைவர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story