மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
சேலத்தில், மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.
கொண்டலாம்பட்டி,
சேலத்தில், மோட்டார்சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 34), தறித்தொழிலாளி. இவருடைய மனைவி ராதா(31). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நெய்காரப்பட்டியில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர். இவர்கள் நெய்காரப்பட்டி அருகே உள்ள பெரியகலம் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், திடீரென ராதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதா சத்தம் போட்டார். அதற்குள் மர்ம ஆசாமிகள் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story