போடி அருகே 18-ம் கால்வாயின் குறுக்கே பாதை அமைத்திருப்பதால் விவசாயம் பாதிப்பு
போடி அருகே 18-ம் கால்வாயை ஆக்கிரமித்து, அதன் குறுக்கே பாதை அமைத்திருப்பதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
போடி,
முல்லைப்பெரியாற்று தண்ணீரை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்கனவே 17 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. 18-வது கால்வாய் திட்டத்துக்காக கடந்த 1996-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் சங்காபுரம் வழியாக நாகலாபுரம் சென்று முல்லைப்பெரியாற்றினை தண்ணீர் சென்றடையும் வகையில் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டது. 18-ம் கால்வாய் திட்டத்தை போடி வரை அதிகரித்து, கொட்டக்குடி ஆற்றை அடையும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 1½ ஆண்டுகளில் போடி கூலிங்காற்றுடன் இணைக்கப்பட்டு 18-ம் கால்வாய் திட்ட பணி நிறைவடைந்தது.
இந்த பகுதியில், 18-ம் கால்வாயின் நேரடி பாசனம் கிடையாது. வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 50 குளங்கள் நிரம்பும். அதில், 4 மாதம் வரை தண்ணீர் தேங்கி நிற்கும்.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வற்றாமல் இருக்கும். இந்த தண்ணீரை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
போடி பரமசிவன் மலை அடிவாரப்பகுதியில், 18-ம் கால்வாய் தண்ணீர் கூலிங்காற்றில் கலக்கிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயனடையும் விதமாக 18-ம் கால்வாய் இடையே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், கால்வாயின் குறுக்கே அனுமதியின்றி மணல் மற்றும் கற்களை கொட்டி பாதை அமைத்துள்ளார். அதன் வழியாக தற்போது லாரி, டிராக்டர்கள் சென்று வருகின்றன. கால்வாயின் குறுக்கே பாதை அமைத்திருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கால்வாயை கடந்து செல்வதற்கு பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்ட பாதையை பயன்படுத்தாமல், தனியாக பாதையை உருவாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேநிலை நீடித்தால் 18-ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வருங்காலத்தில் தண்ணீர் வீணாகும் நிலை ஏற்படும். அதற்கு முன்பு அந்த பாதையை அகற்ற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் விருப்பம் ஆகும்.
Related Tags :
Next Story