திண்டுக்கலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கூடிய மாட்டுச்சந்தை


திண்டுக்கலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கூடிய மாட்டுச்சந்தை
x
தினத்தந்தி 23 April 2018 6:30 AM IST (Updated: 23 April 2018 6:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் நாகல்நகரில், 20 ஆண்டுகளுக்கு பிறகு மாட்டுச்சந்தை கூடியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாகல்நகர் சந்தைப்பேட்டையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச்சந்தை நடந்து வந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க, விற்க சிறந்த சந்தையாக திண்டுக்கல் சந்தை விளங்கியது. மேலும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

இந்தநிலையில், வறட்சி, வழிப்பறி, போதிய இடவசதியின்மை உள்பட பல்வேறு காரணங்களால் மாட்டு சந்தை மூடப்பட்டது. இதையடுத்து, வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் அந்த பகுதியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே 20 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று மீண்டும் மாட்டுச்சந்தை கூடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மாட்டுச்சந்தை மூடப்பட்டதை அடுத்து விவசாயிகள் ஒட்டன்சத்திரம், செம்பட்டி மற்றும் திருச்சி மாவட்டம் மணப்பாறை போன்ற இடங்களில் உள்ள மாட்டு சந்தைகளுக்கு சென்று மாடுகளை வாங்கி வந்தனர். இதனால், விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவு, மாடுகளை வாங்கி வண்டியில் ஏற்றி வருவதற்கு கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்தது. இந்தநிலையில், மீண்டும் திண்டுக்கல்லில் மாட்டுச்சந்தை கூடியது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இன்று (நேற்று) நடந்த மாட்டுச்சந்தைக்கு பசுமாடு, கன்றுக்குட்டி உள்பட 56 மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 12 ஜல்லிக்கட்டு காளைகளும் அடங்கும். இவை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச்சந்தை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story