செஞ்சி கோட்டை மீது ஏறி போராட்டம்


செஞ்சி கோட்டை மீது ஏறி போராட்டம்
x
தினத்தந்தி 23 April 2018 6:36 AM IST (Updated: 23 April 2018 6:36 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி செஞ்சி கோட்டை மீது ஏறி போராட்டம் நடத்திய 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இது தவிர பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேபோல் விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தை சேர்ந்த விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சின்னசேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ரசிகர் மன்றத்தினர் சுற்றுலா பயணிகள் போல் செஞ்சி கோட்டைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு, 700 அடி உயரமுள்ள செஞ்சி கிருஷ்ணகிரி கோட்டையில் சுமார் 350 அடி உயரத்துக்கு ஏறி சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் தாங்கள் மறைத்து கொண்டு சென்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பிரேம், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட நிர்வாகிகள் ஏழுமலை, கில்பர்ட், ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் வாகனத்தில் ஏற்றி, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் இந்த போராட்டத்தால் செஞ்சி கோட்டையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story