குழந்தை திருமணத்தை ஒழிக்க அங்கன்வாடி பணியாளர்களின் பங்களிப்பு அவசியம்


குழந்தை திருமணத்தை ஒழிக்க அங்கன்வாடி பணியாளர்களின் பங்களிப்பு அவசியம்
x
தினத்தந்தி 23 April 2018 6:39 AM IST (Updated: 23 April 2018 6:39 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை திருமணத்தை ஒழிக்க அங்கன்வாடி பணியாளர்களின் பங்களிப்பு அவசியம் என்று கலெக்டர் சுப்பிரமணியன் பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் குடிமைப்பணிகள் நாளையொட்டி நேற்று அங்கன்வாடி பொறுப்பாளர்கள், ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

குழந்தைகளின் வளர்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதோடு சுகாதாரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 15 வயது முதல் 49 வயது வரை உள்ளவர்களில் பெண்கள் 36 சதவீதமும், ஆண்கள் 32 சதவீதமும் ரத்தசோகை உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு நமது மாநிலத்தில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் என்ற திட்டத்தின் கீழ் 5 மாவட்டங்களை அறிவித்துள்ளது. அதில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. எனவே நமது மாவட்டத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்தை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுப்பதன் மூலம் ரத்தசோகை நோயை தவிர்க்க முடியும். இதன் மூலம் எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், அறிவாளியாகவும் வளர முடியும். இந்த சமுதாய பணியை அங்கன்வாடி பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக செய்ய வேண்டும். அதோடு குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்கவும் அங்கன்வாடி பணியாளர்களின் பங்களிப்பு அவசியம் தேவைப்படுகிறது. இதில் உங்களின் பங்களிப்பை தர வேண்டும்.

மேலும் பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். குடற்புழு நீக்க மாத்திரையை 6 மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கார்த்திகேயன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி, துணை நிலநீர் வல்லுனர் பழனிவேலன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் சாமுண்டீஸ்வரி, விஜயலட்சுமி, ராஜம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story