தமிழகத்தின் அழுத்தத்திற்கு பிரதமர் அடிபணியக்கூடாது சித்தராமையா வலியுறுத்தல்


தமிழகத்தின் அழுத்தத்திற்கு பிரதமர் அடிபணியக்கூடாது சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 April 2018 4:45 AM IST (Updated: 24 April 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை அமைக்கும் விஷயத்தில் தமிழகத்தின் அழுத்தத்திற்கு பிரதமர் அடிபணியக்கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு,

காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் தமிழகத்தின் அழுத்தத்திற்கு பிரதமர் அடிபணியக்கூடாது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். இதுகுறித்து அவர் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை. வருகிற 3-ந் தேதிக்குள் ‘ஸ்கீம்’ அமைக்க ஒரு செயல் திட்டத்தை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கூறி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை நாங்கள் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறோம். இந்த விஷயத்தில் எங்களின் கருத்து குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற விஷயத்தில் தமிழகத்தின் அழுத்தத்திற்கு பிரதமர் பணியக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி செயல் திட்டத்தை மட்டுமே வகுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு தயார் செய்யும் செயல்திட்ட அறிக்கையை வழங்குமாறும் நாங்கள் கேட்டுள்ளோம். கர்நாடகமும் ஒரு திட்டத்தை வகுத்து மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் கவலையை எடுத்துக்கூற நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமரிடம் கேட்டுள்ளோம். இதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story