பாதுகாப்பு இல்லாததால் தொகுதிக்குள் செல்வதில்லை - கருணாஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு


பாதுகாப்பு இல்லாததால் தொகுதிக்குள் செல்வதில்லை - கருணாஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 24 April 2018 4:30 AM IST (Updated: 24 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

எனக்கு இந்த மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் எனது தொகுதிக்குள் செல்வதில்லை என்று கருணாஸ் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றம் சாட்டினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக நான் மனு கொடுத்தால் அதனை அதிகாரிகள் நிறைவேற்றுவதில்லை. என் தொகுதி மக்களுக்கு எதையும் செய்ய முடியாத இந்த பதவி தேவைதானா என்று சட்டமன்றத்தில் கூட கூறிவிட்டேன்.

ஆனாலும் எனக்கு எந்த பயனும் இல்லை. தோழமை கட்சி சட்டமன்ற உறுப்பினரான எனக்கு யாருடைய ஆதரவும் இதுவரை இல்லை. இதுவரை எனது தொகுதி மக்களுக்கான தேவைகளுக்காக 159 மனுக்கள் கொடுத்துள்ளேன். 3 மனுக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. எனது தொகுதி நிதி முழுமையும் மக்களுக்கான திட்டங்களுக்காக செலவிட்டுள்ளேன். இதனை போஸ்டர் அடித்து ஒட்டி தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது என் கடமை. என் கடமையை தான் செய்துள்ளேன்.

இந்த மக்களுக்காக உழைக்க தயாராக இருந்தும் எந்த அதிகாரியும் எந்த கோரிக்கையையும் செய்து கொடுப்பதில்லை. முதல்-அமைச்சரிடம் கூட பலமுறை கூறிவிட்டேன். ஒரு சில அதிகாரிகள் அவர்களால் முடிந்த வேலைகளை செய்து கொடுக்கின்றனர். என்னை நம்பியவர்களுக்கு எதுவும் செய்ய முடியாதபோது ஏன் இங்கு வெற்றி பெற்றோம் என்ற மனவருத்தம் ஏற்படுகிறது.

நான் தொகுதி பக்கமே வருவதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதனால் அதுவரை சட்டமன்ற கூட்டம் தவிர மற்ற நாட்களில் தொகுதியில் தங்கியிருந்தேன். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எனக்கு இந்த மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாததால் எனது தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது.

நான் செல்லும் இடங்களில் கல் வீசுகின்றனர். காருக்குள் பாட்டில்களை வீசுகின்றனர். யார் என்று கேட்டால் உள்நோக்கத்துடன் மாற்று சாதியினரை குற்றம் சாட்டி பழி சுமத்துகின்றனர். என்னால் இந்த பகுதியில் ஒரு கலவரம் வரவேண்டாம். அதற்கு நான் காரணமாக இருக்கவும் வேண்டாம். என்னாலோ, என்னை வைத்தோ எந்தவொரு ஒரு தப்பான செயலோ, விரும்பத்தகாத சம்பவமோ இந்த பகுதியில் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் வருவதை தவிர்த்து வருகிறேன்.

நான் வருவதால் ஒரு சம்பவம் நடந்து அதனால் என் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டால் அந்த பாவத்தை சுமக்க நான் தயாராக இல்லை. உச்சநீதிமன்றம் ஒரு மீட்டருக்கு மேல் மணல் அள்ளக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த மாவட்டத்தில் 5 மீட்டருக்கு மேல் மணல் அள்ளி கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனை யாரும் தட்டிக்கேட்பதில்லை. நான் உழைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு யாரும் ஒத்துழைக்க தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story