காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 April 2018 4:30 AM IST (Updated: 24 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர்,

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி தி.மு.க.கூட்டணிக்கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று மாலை திருப்பூர் புஷ்பா தியேட்டர் சந்திப்பில் நடந்தது. போராட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.

ஆண்களும், பெண்களும் அவினாசி ரோட்டில் ஒரு பகுதியில் வரிசையாக நின்றனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் கைகளில் ஏந்தியபடி நின்றனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். புஷ்பா தியேட்டர் சந்திப்பில் இருந்து பங்களா பஸ் நிறுத்தம் வரை மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வரிசையாக நின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மனித சங்கிலி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றார்.

இந்த போராட்டத்தில் சி.கோவிந்தசாமி, டி.கே.டி.மு.நாகராஜன், மேங்கோ பழனிசாமி, தங்கராஜ், ஈஸ்வரமூர்த்தி, ராஜ்மோகன்குமார்(தி.மு.க.), முத்துக்கண்ணன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), ரவி(இந்திய கம்யூனிஸ்டு), கோபி(காங்கிரஸ்), துரைசாமி, சிவபாலன்(ம.தி.மு.க.), கோவை செய்யது(ம.ம.க.), நசீர்(த.மு.மு.க.), முஸ்தபா(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), தம்பி வெங்கடாசலம்(கொ.ம.தே.க.), செல்வராஜ்(திராவிட இயக்க தமிழர் பேரவை), ஈஸ்வரன்(உழவர் உழைப்பாளர் கட்சி), ஆறுமுகம்(திராவிடர் கழகம்) மற்றும் பெண்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். 

Next Story