காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 60 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 60 பேர் கைது
x
தினத்தந்தி 24 April 2018 4:00 AM IST (Updated: 24 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உடுமலையில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 60 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

உடுமலை,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல், ரெயில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நேற்று உடுமலையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதனால் நேற்று காலை உடுமலை ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் மாநில இளைஞர் அணி தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் காலை 11 மணிக்கு உடுமலை ரெயில் நிலையம் முன்பு கொடிகளுடன் திரண்டனர்.

அவர்கள் மதுரையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முன்னெச்சரிக்கையாக ரெயில் நிலைய நுழைவு வாயிலை பூட்டினார்கள். இதனால் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினரால் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முடியவில்லை. இதைதொடர்ந்து அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்கக்கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனால் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்த மாநில இளைஞர் அணி தலைவர் உள்பட 60 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக ரெயில் நிலைய நுழைவு வாயில் அடைக்கப்பட்டிருந்ததால், பயணிகள் அனைவரும் மாற்று பாதையில் ரெயில் நிலையத்துக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story