கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல 3-வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம்


கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல 3-வது நாளாக தடை: சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 24 April 2018 4:00 AM IST (Updated: 24 April 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்தனர்.

ராமேசுவரம்,

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் கடல் அலைகள் சுமார் 10 அடி உயரம் வரை எழுந்து சீற்றத்துடன் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளான ராமேசுவரம், அரிச்சல் முனை, தனுஷ்கோடி மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கி நீராடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, தனுஷ்கோடி செல்லும் வழிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. கடலில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக கடல் பகுதி வழக்கம்போல அமைதியாக காணப்பட்டது. தனுஷ்கோடியில் மட்டும் வழக்கத்தை விட அலைகள் ஆக்ரோஷத்துடன் சீறி எழுந்தன. நேற்று 3-வது நாளாக தனுஷ்கோடிக்கு செல்ல எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களும் புதுரோடு பகுதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் கோடை விடுமுறையை கழிக்க அதிக அளவில் வந்திருந்த பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story