வத்திராயிருப்பு நகர் பகுதியில் வெளியூர் ஆட்டோக்கள் இயக்க எதிர்ப்பு


வத்திராயிருப்பு நகர் பகுதியில் வெளியூர் ஆட்டோக்கள் இயக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 April 2018 3:15 AM IST (Updated: 24 April 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு நகர் பகுதியில் வெளியூர் ஆட்டோக்கள் வந்து நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் நகரில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களின் பிழைப்பு பாதிக்கப்படுவதால் வெளியூர் ஆட்டோக்களுக்கு தடை விதிக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

விருதுநகர்,

சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் வத்திராயிருப்பு கிளை சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

வத்திராயிருப்பு நகரில் 65 ஆட்டோ தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுடைய தொழிலுக்கு இடையூறாகவும், வத்திராயிருப்பு நகரின் போக்குவரத்துக்கு இடையூறாகவும் வெளியூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கிறார்கள். இதனால் பிரச்சினை ஏற்படுவதால் போலீசாரிடம் முறையிட்டோம்.

போலீசாரும் எங்களை அழைத்து பேசி சில முடிவுகளை எடுத்தனர். அந்த முடிவுகளை ஏற்றுக்கொள்ள வெளியூர் ஆட்டோ ஓட்டுனர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் போலீசார் ஒப்பந்தத்தை மீறிய வெளியூர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்களுடைய சங்கத்தினர் 25 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். அதன் பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது வத்திராயிருப்பு நகரில் மேற்கு பகுதியை சேர்ந்த ஆட்டோக்களில் ஒன்று மட்டும் வத்திராயிருப்பில் நிறுத்தி கொள்வது என்றும், வேறு தெருக்களில் ஆட்டோக்களை நிறுத்த கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை.

வெளியூர்களில் இருந்து வத்திராயிருப்புக்கு ஆட்டோக்களில் டிக்கெட் போட்டு, ஆட்களை ஏற்றி வந்து பிரச்சினை செய்யும் கூமாபட்டி, ராமசாமியாபுரம், சேதுநாராயணபுரம், மகாராஜாபுரம், தம்பிபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்து வத்திராயிருப்பு நகரில் ஆட்டோ ஓட்டும் 65 தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Related Tags :
Next Story