வேலைக்கு சென்ற இடத்தில் சித்ரவதை: வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத்தர வேண்டும், கலெக்டரிடம் விவசாயி மனு


வேலைக்கு சென்ற இடத்தில் சித்ரவதை: வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டுத்தர வேண்டும், கலெக்டரிடம் விவசாயி மனு
x
தினத்தந்தி 24 April 2018 3:30 AM IST (Updated: 24 April 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் தன்னுடைய மகனை சித்ரவதை செய்வதாகவும், அவனை உடனடியாக மீட்டுத்தர வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயி மனு அளித்தார்.

கடலூர்,

பண்ருட்டி தாலுகா கண்டரக்கோட்டை ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் ராஜூ. விவசாயி. நேற்று இவர் தன்னுடைய மனைவி சகிலாவுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்துக்கு வந்தார். பின்னர் அவர் கலெக்டர் தண்டபாணியை சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு 4 மகள்களும், குணசேகரன் (வயது 23) என்கிற ஒரே மகனும் உள்ளனர். குணசேகரன் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். அவரை எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் துபாய் நாட்டுக்கு கடந்த 31-8-2017 அன்று வேலைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தனியார் நிறுவனத்தில் எழுத்தர் வேலை என்று கூறினார். ஆனால் அங்கு அவருக்கு எழுத்தர் வேலை வழங்கவில்லை. அதற்கு பதிலாக கார்களை கழுவி, சுத்தம் செய்யும் வேலை வழங்கிவிட்டார்கள்.

இது பற்றி செல்போனில் பேசி எங்களிடம் கூறினார். மேலும் அவரை 18 மணி நேரம் வேலை வாங்கி, அடித்து சித்ரவதை செய்வதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். ஆகவே வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் என்னுடைய மகனை உடனே மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ராஜூ தெரிவித்து இருந்தார். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story