பார்வதிபுரம் மேம்பாலப்பணிக்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது


பார்வதிபுரம் மேம்பாலப்பணிக்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 24 April 2018 4:15 AM IST (Updated: 24 April 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

பார்வதிபுரம் மேம்பால பணிக்காக திருவனந்தபுரம்- நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் நாகர்கோவில் கோட்டத்தின் சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் ஏற்கனவே டெரிக் சந்திப்பு முதல் தோட்டியோடு சந்திப்பு வரை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வரும் வாகனங்களை கடந்த 21-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு திருவனந்தபுரம்-நாகர்கோவில் சாலையில் களியங்காடு சந்திப்பில் இருந்து களியங்காடு சாலை, இறச்சகுளம், புத்தேரி வழியாக நாகர்கோவிலை சென்றடையும் வகையில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்வதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்திருந்தார். ஆனால் அன்றைய தினம் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரவில்லை.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்கப்படவேண்டிய போக்குவரத்து மாற்றம் தொடர்பான அறிவிப்பு பலகைகள், திருப்பங்கள் மற்றும் வளைவுகள் பற்றிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாமல் இருந்ததாலும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படக்கூடிய சாலையில் இரண்டு, மூன்று இடங்களில் குண்டும், குழியுமாக இருப்பதாலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த பணிகள் அனைத்து முடிந்ததும் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் விதமாக மாற்றுப்பாதை தொடர்பான அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் போன்றவை வைக்கப்பட்டு, குண்டும், குழியுமாக இருந்த சாலைப்பகுதிகளும் சரிசெய்யப்பட்டன. இதையடுத்து நேற்று காலை 11.30 மணி முதல் திருவனந்தபுரம்- நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் மற்றும் களியங்காடு பகுதிகளில் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள சாலையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை மாற்றுப்பாதையில் இயங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story