தோரணக்கல்பட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு


தோரணக்கல்பட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 April 2018 4:00 AM IST (Updated: 24 April 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

தேராணக்கல்பட்டி கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் கரூர் தோரணக்கல்பட்டி கிராமம் டி.செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

அடுக்குமாடி குடியிருப்புகள்

எங்களது பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்களது பகுதியில் சரியான குடிநீர் வசதி இல்லை. குடிநீர் எப்போதாவது வந்தாலும் அதிலும் கழிவு நீர் கலந்து வருவதால் தொற்று நோய் ஏற்படுகிறது. தற்போது எங்களது பகுதியில் அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் துப்புரவு பணியாளர்களுக்கு கட்ட இடம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படும்.

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புதிதாக அடுக்குமாடிகள் கட்டப்படுவதால் விளையாட்டு மைதானம் பாதிக்கப்படும். வருங்காலத்தில் பள்ளிக்கட்டிடம் விரிவாக்கம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே துப்புரவு பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பை வேறு இடத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

குடிநீர் ஆதாரம்

வேலாயுதம்பாளையம், கரைப்பாளையம், கட்டிப்பாளையம், கோம்புபாளையம், நடையனூர், முத்தனூர், கவண்டன்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், புகளூர் காகித ஆலை நிறுவனத்தினர் காவிரி ஆற்றில் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதையும், காவிரி ஆற்றங்கரையோரம் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளில் ஆலைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும். குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இதே போல் விவசாய சங்கத்தினர் கொடுத்த மனுவில், காகித ஆலை நிர்வாகம் காவிரி ஆற்றில் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர். முகநூல் நண்பர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் கணவரால் கைவிடப்பட்ட காஞ்சனா என்பவரின் மகன் விஜயக்குமாருக்கு (23) மூளை அறுவை சிகிச்சைக்கு உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

ஏமூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனுவில், தங்கள் பகுதியில் மாரியம்மன் கோவில் இடம் அரசால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் நிலம் கையகப்படுத்த கூடாது என கூறியிருந்தனர்.

285 மனுக்கள்

அப்துல்கலாம் நினைவு அறக்கட்டளை சார்பில் கொடுத்த மனுவில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்க வேண்டும். அவர்களது உதவியாளர்களை அனுப்பி கலந்து கொள்ள வைப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 285 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்ற கலெக்டர் அன்பழகன் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சக்கரம் பொருந்திய நடைதாங்கிகளையும், ஜப்பான் செல்லும் இளம்விஞ்ஞானி மாணவன் ஹரிஹரனின் பெற்றோருக்கு குடும்ப அட்டையையும் கலெக்டர் வழங்கினார். 

Next Story