மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலக மாடியில் இருந்து குதிக்க முயன்ற தொழிலாளி


மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி கலெக்டர் அலுவலக மாடியில் இருந்து குதிக்க முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 24 April 2018 3:45 AM IST (Updated: 24 April 2018 9:40 AM IST)
t-max-icont-min-icon

மனைவியுடன் சேர்த்து வைக்கக்கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலக மாடியில் இருந்து குதிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், அய்யலூர் அருகே உள்ள வளவிசெட்டிபட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 40) என்பவர் மனு கொடுக்க வந்தார். அவர், தனது மனைவி தங்கம் (35), மகன்கள் மதியழகன் (10), ஜெயராஜ் (8) ஆகியோரையும் அழைத்து வந்திருந்தார்.

ஆனால், கலெக்டர் அலுவலகத்துக்குள் வரும்போதே தங்கம் அழுதுகொண்டே இருந்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரிடம் விசாரித்தபோது, தனது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாகவும், 8 கிலோ மீட்டர் நடத்தியே அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, முருகேசனிடம் விசாரித்தபோது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் போலீசாரிடம், அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தனது நிலத்தை அபகரித்து கொண்டார். அந்த நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுக்க வேண்டும் என்றார். ஆனால், முருகேசனுடன் அவருடைய மனைவி வர மறுத்து குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திலேயே அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து, முருகேசனை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனிடம் புகார் மனு கொடுத்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். பின்னர், மீண்டும் முருகேசன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு மனைவி, குழந்தைகள் இல்லாததை பார்த்த அவர் திடீரென கலெக்டர் அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்றார். பின்னர் தேசிய கொடி கம்பத்தின் அருகே இருந்த தடுப்பு சுவரில் ஏறி நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக சத்தம் போட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப்பார்த்து, அதிர்ச்சி அடைந்த போலீசார் மாடிக்கு ஓடினர். பின்னர் நைசாக அவருடைய காலை பிடித்து தடுப்பு சுவரில் இறக்கி கீழே கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, தற்கொலைக்கு முயற்சி செய்ததாக அவரை கைது செய்த போலீசார் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

Next Story